உறவுமுறை என்பதன் அர்த்தம் என்ன? அது உங்கள் காதலன் அல்லது காதலியைக் குறிக்குமா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களைக் குறிக்குமா? அல்லது உங்களுடன் தொழில் புரிவோரைக் குறிக்குமா? 

உண்மையில் உறவுமுறை என்பது இவை அனைத்தையும்விட மிகப் பரந்த ஒரு விடயமாகும். பொதுவாக உறவுமுறை பற்றியும் அவை எவ்வாறு உங்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப்பற்றியும் பார்ப்போம்.

சிறந்த உறவுமுறை என்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்லுணர்வையும் தரக்கூடியது. வளரிளம் பருவத்தில் இருக்கும் உங்கள் வாழ்க்கையில் உறவுமுறை விசேட பங்கு வகிக்கிறது. ஒருவேளை அது நீங்கள் யார்? உங்கள் மதிப்பு என்ன? என்பது பற்றி உங்களுக்கு பல முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் சிறந்த உறவுமுறை என்பது உடனடியாக ஏற்படுவதில்லை. அது மகத்தானதாக வளர்ச்சியடைய காலமும் சக்தியும் தேவைப்படுகிறது. நீடித்த உறவை வளர்த்துக் கொள்வதற்கு எப்போதும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்கும் பண்பும், நேர்மையும் அவசியம்.

ஒரு ஆரோக்கியமான உறவுமுறைக்கு இருதரப்பினரும்:

  • கௌரவமாகவும் கருணையுடனும் வழிநடத்தப்பட வேண்டும்.
  • ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேச வேண்டும்.
  • ஒன்றாக நேரத்தை செலவழிப்பதை விரும்ப வேண்டும்.
  • ஒருவர் மற்றவரின் முக்கியமான விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
  • ஒருவர் மற்றவரின் உடல், உணர்வு மற்றும் பாலியல் வரம்புகளுக்கு  மதிப்பளிக்க வேண்டும்.

உங்களுக்கு காதல் உறவு இருப்பின், முக்கியமாக ஒருவரைப் பற்றி மற்றவர் அக்கறை செலுத்த வேண்டும். அது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே உங்களைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டும். சில உறவுமுறைகளில் அடித்தல், அறைதல் அல்லது உதைத்தல் போன்ற உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இது ஆரோக்கியமானதோ அல்லது சிறந்த உறவு முறையோ அல்ல. 

பாலியல் துஷ்பிரயோகம் என்பது தேவையற்ற விதத்தில் பாலியல் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தல் ஆகும். இதுவும் ஒருவகையில் பாலியல் வன்முறைதான். இவற்றில், ஒரு தரப்பின் விருப்பமின்றி மற்றைய தரப்பு பாதகமான கருத்துகளை வெளியிடுவதில் இருந்து முத்தம் மற்றும் உடலுறவு வரை செல்ல முயற்சித்தல் வரையான அனைத்தும் அடங்கும் .

உணர்ச்சித் துஷ்பிரயோகங்களால் உங்கள் சுயமரியாதை பாதிப்புக்குள்ளாதல் அல்லது அவமானப்படல் போன்றவை ஏற்படலாம். அவற்றில் சம்பந்தப்பட்ட மற்ற நபர் சொல்லும் விடயங்கள் அல்லது வார்த்தைகள் உங்கள் மனதைப் பாதிக்கலாம், அதனால் நீங்கள் உங்களை பெறுமதியற்றவர் என உணரத் தொடங்கலாம். எனவே நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு எது சிறந்தது என்பதும், உங்கள் ஆற்றல் என்ன என்பதும்  உங்களுக்குத் தெரியும், எனவே பிறிதொரு நபர் உங்கள் தன்னம்பிக்கைக்குத் தீங்குவிளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.

நீங்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுமுறைக்கு தகுதியானவர் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே எந்த வகையிலான துஷ்பிரயோகத்தையும் அனுமதிக்க முடியாது. நீங்கள் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உங்களுக்கு உங்கள் அடையாளமும், சுதந்திரமும், அதற்கான இடமும் தேவை. ஆகையினால் உங்கள் உறவுமுறையை ஆய்வு செய்யுங்கள். அது ஒரு ஆரோக்கியமற்ற அல்லது உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத உறவாக இருப்பின், அது உண்மையான காதலாக இருக்காது. எனவே அத்தகைய காதலுக்கு நீங்கள் "குட்பை” சொல்வது சிறந்த முடிவாக இருக்கும்.

உறவுகள் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். சில நேரங்களில் அது கடினமானதாகவும் இருக்கலாம். உங்கள் உறவுமுறை நேர்மை, அக்கறை, மரியாதை ஆகிய பண்புகள் நிறைந்ததாக இருப்பின், உங்களிடையே ஒரு நல்ல உறவுமுறை உள்ளதாக ஏற்றுக் கொள்ளலாம். அங்கு உண்மையான அன்பு  இருப்பதையும் நாம் காணலாம்.

உறவுமுறையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடையவராக இருக்கவேண்டும், கடமைகளை ஏற்பதற்கும் மற்றவர்களுடன் விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். நமது கருத்துக்களை மற்றவர்களின் மனது புண்படாதவகையில் தெரிவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மேலும் கொடுப்பதிலும் பெற்றுக்கொள்வதிலும் சமநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும். எனவே ஒரு உறவுமுறையை ஆரம்பிக்கும் நோக்கம் உங்களுக்கு இருப்பின் அல்லது ஒருவருடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால், அவர் உங்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றார் என்பதையும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களிடமே இக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • எந்த அளவுக்கு பொறுப்புக்களை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்?
  • எனக்கு முன்னர் மற்றவரை பற்றிச் சிந்திக்கத் தயாராக இருக்கிறேனா?
  • எந்த அளவிற்கு நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்?
  • எனது நண்பர்கள் அனைவருக்கும் காதலன்/ காதலி இருப்பதாலா நானும்   இதைச் செய்கிறேன்?

உறவுமுறைகளை ஆரம்பிப்பது இலகுவானது, ஆனால் அது என்றும் நிலைத்திருக்க காலமும், சக்தியும் தேவைப்படுகிறது. இதற்கு மேலாக உங்கள் சொந்த அடையாளம், மதிப்பு, கொள்கைகளையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உறவு முறையைப் பேண நீங்கள் அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. உண்மையான காதலுக்கு அல்லது உறவுமுறைக்கு பரஸ்பரம் மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் துணைவர் உங்களுக்கு விருப்பம் இல்லாத எதையாவது உங்களைச் செய்யச் சொல்வாராயின், நீங்கள் அவரிடம் உங்கள் அதிருப்தியை அல்லது உங்களுக்கு விருப்பமில்லை என்பதை  உங்கள் உறவுமுறைக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில் தெரிவிக்கக்கூடிய சுதந்திரம் உங்களுக்கு இருக்கவேண்டும்.

உங்கள் துணைவர் உங்களை மதிப்பவராகவும், புரிந்து கொள்ளக்கூடியவராகவும், உங்கள் தெரிவை ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும் இருக்கவேண்டும்.

காதல் என்றவுடன் உங்கள் துணையின் சொந்த விடயங்களில் தலையீடு செய்ய முடியும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. உறவுமுறை இருக்கின்றதோ இல்லையோ அனைவருக்கும் தமது சொந்த விடயங்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு. உதாரணத்திற்கு உங்கள் உறவுமுறையை பேணிக் கொள்ளவும், உங்கள் உண்மைத் தன்மையையும், விசுவாசத்தையும் நிரூபிப்பதற்காகவும், நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கடவுச் சொல்லையோ, அல்லது உங்கள் சமூக வலைத்தளங்களையோ உங்கள் துணைவருக்குக் காட்ட வேண்டும் அல்லது பார்க்க இடமளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உறவில் அவ்வாறான அவநம்பிக்கைகள் ஏற்படுமாயின், அதன் அர்த்தம் உங்கள் இருவருக்குமிடையில் நல்ல உறவு இல்லை என்பதே ஆகும். இதற்காக நீங்கள் என்ன செய்தாலும் அது வெற்றியளிக்காது. இது உண்மையான காதல் அல்ல.

எல்லா உறவுமுறையிலும் சில விடயங்கள் மிகத் தெளிவாக இருக்கும், அதேவேளை சில விடயங்கள் தெளிவில்லாமல் இருக்கும். எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை இருவரும் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் தனிப்பட்டவர்களாக இருக்கும்போதும், தம்பதிகளாக ஆனபிறகும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து இவ்வாறு செய்வீர்களாயின் உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமான, கௌரவமான பொறுப்புமிக்க உறவுமுறையுடன்கூடிய வாழ்க்கையாக இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கை வரையறைகளை மீறி 'கோடு தாண்ட வேண்டிய' தேவையும் ஏற்படாது.

பின்வரும் சூழ்நிலைகள் உங்களுக்கு இருப்பின், உங்கள் துணைவர் கோடு  தாண்டும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

“நான் அவருடன் பாலியல் உறவு கொள்ள உடன்படாவிடில், அவர் என்னை விட்டுவிட்டு வேறொருவரை தேடிச் சென்றுவிடுவார்”

“முதலில் அவர் மிகவும் நல்லவராக இருந்தார். ஆனால் பின்னர் அவர் சொல்லும் விடயங்களை நான் கேட்பதில்லை என்று என்னைக் குற்றஞ்சாட்டத் தொடங்கினார். இப்பொழுது நான் ஏதோ பெரும் குற்றம் செய்துவிட்டதைப்போல் எங்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் நான் எதையும் தவறாகச் செய்யவில்லை”

“நான் எனது நண்பர்களைப் பார்த்தால் அவள் அப்செட் ஆகிவிடுகிறாள். நாம் எப்போது வெளியில் சென்றாலும், அவள் என்னுடன் கோபப்படுகிறாள். நான் பெண்களுடன் சுற்றித்திரிகிறேன் என்று அவள் நினைக்கிறாள்”

“சில நேரங்களில் எனது காதலர் என்னை படம்பிடிக்க முயற்சிக்கிறார். அத்துடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் இல்லாததால், என்னை நிர்வாணப் படம் எடுத்து அனுப்பும்படி கேட்கிறார்”

“பாலியல் உறவுக்கு எப்போது நீ தயாராவாயென எனது காதலன் கேட்டுக்கொண்டே இருப்பான். எனக்கு ஒரு தெளிவு வரும் வரை நான் அதுபற்றிக் கூறமாட்டேன். அவன் என் விருப்பங்களை மதிக்கின்றான். ஆயினும் வீணாக எதையேணும் கேட்டுக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் நான் சரியான பாதையிலா செல்கிறேன் என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது”

“நான் வேறு பெண்களுடன் பழகுகிறேனா என்பதை அறிய, அவள் எனது குறுஞ்செய்திகளை பரிசோதிக்கிறாள். அவள் என்னை காதலிப்பதால் சும்மா பரிசோதிப்பதாக கூறுகிறாள்”

“காதலை முறித்துக்கொள்வோம் என்று சொன்னால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவள் கூறுகின்றாள். ஏனெனில் நான் இல்லாவிட்டால் அவளால் வாழ முடியாதாம்”

“அவர் உண்மையிலேயே என் மீது அக்கறையுள்ளவர் என்று நினைத்தேன் ஆனால் என்னைப் பார்த்துப் பொறாமைப்படத் தொடங்கிவிட்டார். அதிக காலம் செல்லும் முன்பே என் உடைகளைப் பற்றி அவர் பிரச்சினை படத்தொடங்கிவிட்டார்”

“அவர் எப்போதும் அவரது நண்பர்கள் முன்னால் என்னைக் கேலிசெய்கின்றார்”

“என்னை ஹோட்டலுக்குச் செல்ல அழைத்தார், வர முடியாதென்று நான் சொன்ன பின்பும் என்னை நச்சரித்துக்கொண்டே இருக்கிறார். அவர் மேல் நான் அன்பு காட்டவில்லையென்றும், அவரை நம்பவில்லையென்றும் கூறுகின்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எவ்வாறு எனது அன்பை அவருக்குப் புரியவைப்பதென்றும் புரியவில்லை”

ஒருவரையொருவர் மதித்து நடப்பதோடு அவரவர் வரம்பு வரையறைகளைப் புரிந்து நடந்துகொண்டால் உறவுமுறை சிறப்பாக இருக்கும். சிறந்த உறவுமுறைக்கு இதோ சில உதாரணங்கள்:

“நாம் பழக ஆரம்பிப்பதற்கு முன்னரே, பல விடயங்களை நன்கு புரிந்துகொண்டோம்”

“சில நேரங்களில் அவர் வேறு பெண்களிடம் பேசும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். ஆனால் அது ஒரு பிரச்சினையல்ல. யாருடன் பேச வேண்டும் என்பது அவர் விருப்பம்”

“அவளுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. அவளுக்கு விளையாட்டில் அதிக நாட்டம் உள்ளது. அவள் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதுடன், நான் அவள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன்”

“மற்றவர்கள் எனக்கு கஷ்டத்தை தந்தாலும் நான் அதை பெரிதுபடுத்துவதில்லை. ஏனெனில் அவர் நான் சொல்பவற்றை செவிமடுப்பதுடன், நான் சொல்லும் விடயங்களிலும் அக்கறை கொள்கின்றார்”

“எனது காதலனும் நானும் இரவில் சிலநேரங்களில் குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்வோம். ஆனால் நாங்கள் படங்களை அனுப்புவதில்லை”

“தயாராக இல்லாவிடில், நாம் எதையும் செய்யத் தேவையில்லை”

“நாங்கள் வாதம் செய்வோம், ஆனால் இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்டு சமரசம் செய்துகொள்வோம்”

“என் காதலி சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் நான் அவளுடன் பேசுவதை விரும்புகிறேன்”

வளரிளம் பருவம் என்பது கற்றல் மற்றும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டிய அற்புதமான ஒரு காலமாகும். அது குழந்தையின் அழுக்குத் துணிகளைக் கழுவும் வயதல்ல! எனவே இக் காலத்தில் தேவையற்ற பாலியல் உறவைத் தவிர்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.

முதலில் ஸ்மாட் பாலியல் பற்றிப் பேசுங்கள். பின்னர் சரியான காலம் வரும்போது ஸ்மாட் பாலியலைத் தேர்ந்தெடுங்கள்.

பால்வினை நோய்கள் மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பம் போன்றவை ஒருவரை மட்டுமல்ல, இரு தரப்பையும் பாதிக்கின்றது. உங்களுக்குப் பாலியல் பற்றி, நோய்த்தடுப்பு மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு பற்றி உங்கள் காதலருடன் பேசுவதற்குக் கஷ்டமாக இருந்தால் நீங்கள் அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் உறவு பற்றி முன்கூட்டியே பேசுங்கள். அப்போது இருவரும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியும். உணர்ச்சிவசப்படும் தருணத்தில் நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.

பாலியல் உறவிற்காக வற்புறுத்தாதீர்கள்

பொதுவாக அனைவரும் தங்கள் பிரிவினருடன் ஒத்துப்போக வேண்டும் என்றே நினைப்பார்கள், ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்கள் மதிப்பை அவர்களில் ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்களுக்கு பாலியல் உறவு தேவையில்லையாயின், நேர்மையாக உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை உங்கள் காதலருக்குத் தெரிவியுங்கள். உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள். உங்கள் நட்பை பேணுவதற்காக பாலியல் பேரம் பேசுவதையோ அல்லது அதற்கு இடமளிக்கவோ வேண்டாம். பாலியல் ரீதியான சுகத்தைக் கொடுப்பதன் மூலம் உங்கள் நட்பை நிரூபிக்க வேண்டும் என உங்கள் காதலர் உங்களுக்கு அழுத்தம் கொடுப்பாராயின், அந்த காதல் பற்றி நீங்கள் இரண்டு முறை சிந்திப்பது நல்லது.

ஒன்றைவிட இரண்டு சிறந்தது

கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களைத் தவிர்க்க வேண்டுமாயின், நீங்கள் கட்டாயம் பிறப்பு கட்டுப்பாடு மற்றும் ஆணுறையைப் பாவித்தல் போன்ற கர்ப்பத்தடை முறைகளைப் பின்பற்றுவது அவசியமானதாகும். ஒருவேளை உங்கள் துணைவர் ஆணுறை போன்றவற்றை பயன்படுத்த மறுப்பாராயின், நீங்கள் உங்கள் உறவுமுறையை மீள் பரிசீலனை செய்வது நல்லது. பாதுகாப்பற்ற சில நிமிட நேர சந்தோஷத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்படக்கூடிய ஒரு முடிவை எடுப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும். எனவே இவ்விடயத்தில் நீங்கள் இருவருமே பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் “இல்லை” என்றால் இல்லை தான், அது பின்னர் “ஆம்” என்று ஆகிவிடாது

உங்கள் துணைவர் உங்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி அதை உங்களால் செய்ய முடியாவிடின், அவர் உங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்கவேண்டும். 'இல்லை' என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் 'ஆம்' என்று ஆகிவிடாது.

நீங்கள் உட்பட ஒவ்வொருவருக்கும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையுண்டு

பாலியல் உறவு வைத்துக்கொள்ள எந்தவித காலக்கெடுவும் இல்லை, அத்துடன் ஒரு உறவுமுறையைத் தக்கவைத்துக்கொள்ள பாலியல் உறவுகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உங்கள் காதலி பாலியல் உறவுக்கு தயாரில்லை என்று சொல்வாறாயின், அந்த முடிவுக்கு மதிப்பளியுங்கள், அவருக்கு ஆதரவாக இருங்கள். அத்துடன் அதற்கான காரணங்கள் பற்றி கலந்தாலோசியுங்கள். ஒவ்வொருவருக்கும் தான் எப்பொழுது, எவ்வாறு பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என இறுதி முடிவெடுக்கும் உரிமை உண்டு. அது முதல் முறையாகவும் இருக்கலாம் பத்தாவது முறையாகவும் இருக்கலாம்.

அவசர நேரத்தில் தயாராக இருங்கள்

பாலியல் உறவின்போது கர்ப்பம் தரித்தல் மற்றும் பால்வினையை நோய்களைத் தவிர்ப்பதில் உங்கள் இருவருக்கும் சமமான பொறுப்பு உண்டு. இரண்டு பேருமே ஆணுறைகள் மற்றும் ECP மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்ய முயற்சித்தாலும் சில நேரங்களில் விடயங்கள் பிழைக்கலாம், எனவே அவ்வாறான நேரங்களில் எதற்கும் தயாராகவிருக்க வேண்டும். அவசர கருத்தரிப்பு மற்றும் ECP மாத்திரைகள் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 72 மணித்தியாலங்களுக்குள், ECP மாத்திரைகளை எடுப்பதன் மூலம் தேவையற்ற கர்ப்பம் தரிப்பதைத் தடுக்க முடியும்.

சிறந்த பாதுகாப்பு என்பது குறைவான பாசம் என்று அர்த்தமல்ல

பாலியல் நடவடிக்கைகளை ஒத்திவைப்பதென்பது உண்மையில் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழியாகும். உடலுறவு அற்ற நெருக்கமான உறவுக்கு எத்தனையோ வழிகள் உண்டு. மாற்று வழிகள் பற்றியும் கவனமாக இருங்கள். உதாரணமாக கால்களுக்கிடையில் (இரண்டு கால்களுக்குமிடையில்) செய்யும் பாலியல் உறவுகூட எதிர்பாராத கர்ப்பத்தில் வந்து முடியலாம்.

தவிர்த்தல் என்பதன் அர்த்தம் நீங்கள் பாலியல் உறவுகளையும், உணர்வுகளையும் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல. கவர்ச்சியான ஒருவரை கண்டதும் அவருடன் காதல் வயப்பட்டு நெருக்கமாக இருக்கவேண்டுமென்ற உணர்வு ஏற்படுவதென்பது ஒரு இயற்கையான மனித உணர்வாகும். உங்களால் உடலுறவு தவிர்த்து, உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமான உறவைப் பேணலாம். உண்மையில் உடலுறவு கொள்ளாது, வித்தியாசமான வழியில் சந்தோசத்தை அனுபவிப்பது உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையில் மேலும் நெருக்கமான உறவைப் பேண உதவியாக அமையும். அதன் மூலம் உங்களைப் பற்றியும்  உங்கள் உடலைப் பற்றியும் மேலும் கற்றுக்கொள்ள  உதவியாக அமையும். யோனி மற்றும் குதம் வழியான உடலுறவில் இருந்து விலகியிருத்தல் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களைத் தடுக்க மிகவும் உதவியாக அமையும். மேலும் தவிர்த்தல் என்பது மருத்துவ மற்றும் ஹோர்மோன் ரீதியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. அது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள ஊக்குவிப்பாகவே அமையும்.

கால்களுக்கிடையில் - எது பாதுகாப்பானது?

கால்களுக்கிடையிலான பாலியல் உறவென்பது காதலியின் மேல் தொடைகளுக்கிடையில் ஆணுறுப்பைச் செலுத்திச் செய்யும் பாலியல் உறவாகும். இவ்வாறான உறவின்போது யோனிக்கருகில் சிந்தப்படும் விந்தணுக்கள் யோனி வழியாக உள்ளே சென்றால் அது தேவையற்ற கர்ப்பம் தரிக்க காரணமாக அமையலாம். எனவே நீங்கள் இதில் கவனமாக இருக்கவேண்டும். ஓரல் செக்ஸ் என அழைக்கப்படும் வாய் மூலமான பாலியல் உறவு எந்நேரமும் பாதுகாப்பாக அமையாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பால்வினை நோய்களைத் தவிர்க்க ஆணுறை மற்றும் பெமிடொம்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

நாம் அனைவரும் இப்பொழுது கையடக்கத் தொலைபேசிகளை, குறிப்பாக ஸ்மார்ட் போன்களை பாவிக்கின்றோம். இக் கையடக்கத் தொலைபேசிகளுக்கும், அதிலுள்ள செயற்பாடுகளுக்கும் நாம் அடிமையாகாமல் இருப்பதே புத்திசாலித்தனமானது. ஏனெனில் மொபைல் போன்களும், Facebook போன்ற சமூக வலைத்தளங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், தகவல்களையும், தரவுகளையும் பெற்றுத் தருவதைப் போன்றே, அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது உங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். எனவே உங்கள் மொபைல் போனை இணையத்தளத்தில் நல்ல விடயங்களைக் கற்பதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், உங்கள் நண்பர்கள் - நண்பிகளுடன் தொடர்பில் இருப்பதற்கும் மற்றும் அது போன்ற நல்ல விடயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

கையடக்கத் தொலைபேசிகளும் நல்ல விடயங்களும்

உங்கள் ஸ்மார்ட்போன்களை பின்வரும் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.

  • நட்பை அதிகரிக்க
  • ஒருவரிடமிருந்து மற்றவர் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள
  • காதல், நட்பு மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்திக்கொள்ள
  • விசேடமான சூழ்நிலைகளில் ஆதரவைப் பெற்றுக்கொள்ள: உதா. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
  • ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள
  • ஆரோக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள
  • தூர இருக்கும்போது பெற்றோருடன் சிறந்த தொடர்புகளைப் பேண.

கையடக்கத் தொலைபேசிகளும் தீய விடயங்களும்

பின்வரும் தேவைகளுக்கு உங்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிக்காதீர்கள்:

  • சைபர் - தொல்லை கொடுப்பதற்கு
  • பாலியல் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை அனுப்ப
  • சட்டவிரோதமான விடயங்களின் உள்ளடக்கம் மற்றும் அந்தரங்கங்களை மீறுதல்
  • நீங்கள் சந்தோமாக உணர்வதற்கு
  • உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு
  • யாருக்காவது தொல்லை கொடுக்க அல்லது துஷ்பிரயோகம் செய்ய.

கையடக்கத் தொலைபேசிகளும் சிறந்த வழிகாட்டல்களும்

எளிமையான விடயங்கள் சிக்கலான சூழ்நிலைகளைவிட சிறந்தது. உங்கள் கையடக்கத் தொலைபேசியும் இதற்கு விதிவிலக்கல்ல.

உங்கள் ஈமெயில் விலாசங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் சுய தகவல்களை Facebook  இல் இடுவதை தவிருங்கள்.

உங்கள் சமூக ஊடக தளங்களில் மக்கள் உங்கள் தனிப்பட்ட விபரங்களை கண்டறிதலைத் தடுக்கும் பாதுகாப்பு உள்ளதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் இணையத்தளத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின், உங்களை பிழையாக வழிநடத்திய நபருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு உதவிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.

உங்களுக்கு எவறாவது தொல்லை கொடுத்திருப்பின் நீங்கள் உங்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பொறுப்புள்ள பெரியவர்களிடம் அது பற்றி சொல்லுங்கள். அப்போது அவர்கள் குறிப்பிட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

  • தவறான எண்ணம்: மாதவிடாய் ஏற்படும்போது நீங்கள் கர்ப்பமடைய முடியாது.
    உண்மை: கர்ப்பமடைய முடியும்! சில நேரங்களில் பெண்களின் மாதவிடாய் காலம் முடியும் முன்னரே சினை முட்டைகள் தோன்றலாம். அல்லது மாதவிடாய் முடிந்து சில தினங்களில் முட்டைகள் தோன்றலாம். இவ்விரண்டு சந்தர்ப்பங்களின்போதும் நீங்கள் மாதவிடாய் காலம் முடியும் முன்னர் உறவு கொள்வதால் அல்லது மாதவிடாய் முடிந்து சில தினங்களில் உறவு கொள்வதால் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது.
  • தவறான எண்ணம்: சுய இன்பம் காரணமாக எடை இழப்பு ஏற்படுகிறது.
    உண்மை: அதை உறுதிப்படுத்த எந்தவிதமான விஞ்ஞான ரீதியான சான்றுகளும் இல்லை. சுய இன்பம் காரணமாக கூந்தல் உதிர்தல், முகப்பரு மற்றும் கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படாது.
  • தவறான எண்ணம்: கால்களுக்கிடையிலான மற்றும் குத வழியான பாலியல் உறவு, பாதுகாப்பானது.
    உண்மை: கால்களுக்கிடையிலான மற்றும் குத வழியான பாலியல் உறவால் சிந்தப்படும் விந்துக்கள் யோனியைச் சுற்றிப் படுவதால் கர்ப்பம் தரிக்கக் காரணமாக அமையலாம். அத்துடன் நீங்கள் பாலியல் தொற்றுநோய்களுக்கும் ஆளாக நேரிடும்.
  • தவறான எண்ணம்: மாதவிடாயின்போது நன்றாகக் குளிப்பது நல்லதல்ல.
    உண்மை: நீங்கள் இக்காலத்தில் நன்றாக குளித்து சுத்தமாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும்.
FaLang translation system by Faboba