பாலினம் சார்ந்த வன்முறைகள் என்றால் ஒரு பாலினத்தைச் சேர்ந்தவர் பிறிதொரு பாலினத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறையாகும். இவ் வன்முறைகள் பொதுவாக பழைய சமுதாய பாலின நெறிமுறைகளின் ஒரு அங்கமாகும். பல சந்தர்ப்பங்களில் இலங்கை போன்ற நாடுகளில், பெண்கள் ஆண்களைவிட பலவீனமானவர்கள் என்று மக்கள் கருதுகின்றனர். அதன் விளைவாக அவர்களை மோசமாக வழி நடத்துவதுண்டு. இது சரியானதல்ல. இவ்வாறான செயல்கள் பொதுவாக பெண்கள் மற்றும் சிறுமிகளை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை சில ஆண்களும், சிறுவர்களும் கூட பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது பல வகையான பாலினம் சார்ந்த வன்முறைகள்  இடம்பெறுகின்றன. இன்றைய இளம் சமுதாயத்தினரைப் பொறுத்த வரையில் டேட்டிங் வன்முறைகள், தெரிந்த மற்றும் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் (கற்பழிப்பு), இன்டர்நெட் மற்றும் இணையத்தளத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் போன்ற வன்முறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே அம் மூன்று விடயங்கள் பற்றியும் நாம் கலந்தாலோசிப்போம்.

ஒரு குடும்பமே சமுதாயத்தின் அடிப்படை அலகாகும். அடிப்படையில் ஒரு ஆண் அல்லது பெண் வாழ்க்கையில் இணைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் நோக்குடன் ஒரு பாலியல் ரீதியான கூட்டு உறவுமுறைக்குள் நுழைகின்றனர். சமூகம் இந்த உறவானது சட்டரீதியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றது. ஆரோக்கியமான பாலியல் செயற்பாடுகள் ஒரு திருமணமான குடும்ப வாழ்க்கையில்தான் சாத்தியம் என்ற நெறிமுறை இருக்கும்போது, திருமணத்திற்கு முன்னரான பாலியல் செயற்பாடுகளை எமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளாததுடன் அதை ஊக்குவிக்கவும் மாட்டாது.

இவ்வாறான ஒரு காதல் பந்தத்தில் நுழையும் தம்பதிகளுக்குப் பொதுவாக திருமணம் மற்றும் குடும்பம் என்பதுதான் இறுதி இலக்காக இருக்கும். இவ்வாறான நிலையில் அந்த உறவானது அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் உணர்வுபூர்வமாக இருக்கவேண்டுமேயொழிய பாலியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.

திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவை சமூகம் நிராகரிக்கிறது. ஏனெனில் பெண் உறுப்பினர் கர்ப்பமடையக்கூடிய சாத்தியம் உள்ளதால் இது பிரச்சினைக்குரியது, ஏனெனில் இதன்போது ஆண் உறுப்பினர், பெண் உறுப்பினரையோ அல்லது அவரது குழந்தையையோ கவனித்துக்கொள்ள சட்ட ரீதியாகக் கட்டுப்பட்டிருக்கவில்லை என்பதால் அது பிரச்சினைக்குரியது. இவ்வாறான வலி மிக்க அனுபவங்களால் பல சிறுமிகள் மற்றும் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாழாகிப்போயுள்ளதை நாம் காணலாம்.

இதன் அர்த்தம் உங்களுக்கு ஒரு காதல் உறவு இருந்தும், நீங்கள் பாலியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் காதலை வெளிப்படுத்த கைகளைப் பிடித்தல் அல்லது முத்தம் கொடுத்தல் போன்ற எத்தனையோ உடல் ரீதியான வழிமுறைகள் உள்ளன. ஒரு உறவுக்குள் இரண்டு உறுப்பினர்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

ஒரு பொறுப்பு மிக்க இளைஞன் என்ற வகையில், நீங்கள் ஒருவருடன் காதல் உறவு வைத்திருப்பீர்களாயின், உங்கள் சுய எல்லைகள் மற்றும் உடல் செயற்பாடுகளின் வரம்புகளை வகுத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகும். இந்த உறவால் உங்கள் கல்வியை எந்தளவு தியாகம் செய்துள்ளீர்கள்? உங்கள் காதலியுடன் எங்கெல்லாம் பயணம் செய்துள்ளீர்கள்? அத்துடன் மிக முக்கியமாக நீங்கள் அவருடன் உடல் மற்றும் பாலியல் ரீதியாக எந்தளவு தூரம் செல்லப்போகின்றீர்கள்?

குறிப்பாக இளம் பெண்களுக்கு,  உங்கள் காதலர் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாத பாலியல் உறவிற்கு அழைக்கும்போது அல்லது அதற்காக அழுத்தம் கொடுக்கும்போது “வேண்டாம்” என்று சொல்லக்கூடிய தைரியம் உங்களுக்கு இருக்கவேண்டும். எந்தளவு இருவரும் ஒருவரை ஒருவர் மற்றும் சுய எல்லைகளை மதிக்கின்றீர்கள் என்பதைக் கொண்டே ஒரு உறவுமுறையின் சிறப்பை நாம் கணிப்பிடலாம்.

டேட்டிங் வன்முறை என்பது “ஒருவர் அவரது ஆண் அல்லது பெண் துணையைக் கட்டுப்படுத்தும் நடத்தையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு வகையான வன்முறையாகும்”. இது உடல், உணர்வு அல்லது பாலியல் போன்ற பல வழிகளில் இடம்பெறுகின்றது. அத்துடன்  உறவு முறையிலான வன்முறையானது மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய ஒரு கூட்டாகும். உறவொன்றுக்குள் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகத்தை, தேவையற்ற முத்தமிடுதல், தொடுதல் அல்லது தனது துணையை அவரது விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துதல் போன்ற வகையில் அடையாளப்படுத்தலாம். இளம் தம்பதியருக்கு உறவுமுறையானது சந்தோசமாகவும், அழகான அனுபவமாகவும், எந்த வகையிலும் வன்முறைகள் அற்றதாகவும் இருக்கவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் இவ்வாறான பாலியல் வன்முறைகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

உறவுமுறை பிரச்சினையில் ஒரு உறுப்பினர் (பெரும்பாலும் ஆண்) தனது துணையுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள, (பெரும்பாலான உறவுமுறைகளில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகள்) தனது மேலாதிக்கத்துடனான வன்முறை வழியை பயன்படுத்துவதாகும். இவ்வாறான போக்குகளை உறவின் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளலாம். நீங்கள் சமீபத்தில் யாருடனாவது ஒரு காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்களாயின், அவரின் நடத்தைகளைக் கவனமாக அவதானியுங்கள். ஒருவேளை அவர்:

  • பொறாமைப்படல் மற்றும் உங்கள் செயல்கள் அவநம்பிக்கையூட்டுவதாக குற்றஞ்சாட்டுதல்.
  • தொடர்ந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தல் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புதல் மூலம் உங்களை பரிசோதித்தல் (சில நேரங்களில் மணிக்கணக்கில்).
  • உங்களைப் பெயர் சொல்லி அழைத்து (மற்றவர்களின் முன்னிலையில் கூட) ஏசுதல்.
  • நீங்கள் என்ன உடுத்த வேண்டும் என்பதை அவர் முடிவு செய்தல்.
  • உறவு துண்டிக்கப்பட்டால் தனக்கு தானே தீங்கு விளைவித்துக்கொள்வதாக பயமுறுத்துதல்.
  • தனிப்பட்ட ரீதியாகவும்,பொது இடத்திலும் கோபம் கொள்ளுதல்.
  • அடிக்கடி உங்களை ஏசுதல் அல்லது பொய்க் குற்றஞ்சாட்டுதல்.

நட்பின் ஆரம்பத்திலேயே இவ்வாறான ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் இடம்பெறுமாயின், இவ்வறிகுறிகள் காலப்போக்கில் அதிகரித்து எதிர்காலத்தில் உங்கள் உறவில் பெரிய பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே ஆரம்பத்திலேயே இவற்றை நன்கு அவதானித்து அவற்றை சரிசெய்துகொள்வது அல்லது சிறந்த தீர்மானங்களை எடுப்பது நன்மை பயக்கும்.

உங்கள் தற்போதைய நட்பில் மேலே குறிப்பிட்டுள்ள நடத்தைகள் பெருமளவில் இருப்பின், அது ஆரோக்கியமற்ற ஒரு உறவு முறையாகும். ஆரோக்கியமான உறவுமுறை என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மதிப்பளித்தல், புரிந்துணர்வுடன் செயற்படுதல் மற்றும் விட்டுக்கொடுத்துச் செயற்படல் போன்றவையாகும்.

இவ்வகையான வாழ்க்கைத் திறன்கள், வளரிளம் பருவத்திலுள்ள உங்களுக்கும் அத்தியாவசியமானது. மற்றவர்களுடான எந்தவொரு உறவுமுறைக்கும் இதுதான் அடிப்படையானது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உண்மையில் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் ஒரு உறவுமுறையில் இருக்குமாயின் இவ்வாறான மதிப்புகளும், திறன்களும் குறைவாகவே இருக்கும். ஒரு தம்பதியராக இத்திறன்களை ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியமாகும். நீங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள உங்களுக்கு உதவி தேவையாயின், உங்களுக்கு உதவ பல தொழில்முறையிலான ஆலோசகர்கள் உங்கள் கையருகிலேயே உள்ளனர்.

சில தீவிரமான பிரச்சினைகளின்போது, ஒரு உறவுமுறையில்  வன்முறை நடத்தைகள் மனநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடினால் அவர் உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார். சில நேரங்களில் உங்கள் மனநல ஆலோசகர் உங்களை ஒரு மனோ வைத்திய நிபுணரிடம் அழைத்துச் செல்லலாம். ஆனால் இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. இத்தகைய நிபுணத்துவ சேவையை பெறுவதன் மூலம் நீங்கள் மற்றவர்களை சரியாக கையாள்வதற்கும், நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் வலுவான உறவுமுறையை பேணிக்கொள்ளவும் உங்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் யாருடனாவது காதல் தொடர்பில் ஈடுபட்டிருக்கலாம். அவர் உங்களை துஷ்பிரயோகம் செய்திருக்கலாம். அதன்  காரணமாக அந்த உறவுமுறையை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வர நினைப்பீர்களாயின், ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடி அவரது வழிகாட்டலின்படி செயல்படுவது சிறந்தது. அப்படிச் செயற்பட்டால், முடிவுக்குவரும் அந்த உறவினால் உங்களுக்கும், உங்கள் காதலருக்கும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் நண்பர்களில் ஒருவர் தவறான உறவுமுறையொன்றில் ஈடுபட்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியவருகின்றது. ஆனால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? சில சமயம் உங்கள் நண்பர் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றி உங்களிடம் சொல்வதற்கு சங்கடப்படலாம். சிலவேளை அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள் தென்படலாம். அதன்போது நீங்கள் விழிப்படையக்கூடும். சில நேரம் உங்கள் நண்பர் அவராகவே முன்வந்து உங்களிடம் அது பற்றி சொல்லக்கூடும். அந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட நண்பருக்காக நீங்கள் பரிதாபப்படுவது இயற்கைதான். அவ்வாறான நிலையில் நீங்கள் அவருக்கு உதவ முன்வரலாம். ஆனால் யாரையும் பாதிக்காதவாறு உங்கள் நண்பருக்கு சரியான உதவியைப் பெற்றுக்கொடுப்பது எப்படியென நீங்கள் தெரிந்திருக்கவேண்டும்.

இதோ எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கான சில ஆலோசனைகள்:

  • உங்கள் நண்பரின் பாதுகாப்பு பற்றிய உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள்.
  • துஷ்பிரயோகம் அவரது தவறல்ல என்பதை அவருக்கு உணர்த்துங்கள் அல்லது அவருக்கு விளக்கப்படுத்துங்கள்.
  • உணர்வுபூர்வமாக அவருக்கு ஆதரவளியுங்கள்.
  • அந்த நபருக்கு உதவக்கூடிய மற்றவர்களுடன் பேச ஊக்கப்படுத்துங்கள்.
  • ஆலோசனைகள் போன்ற தொழில்முறை உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
  • துஷ்பிரயோகம் செய்தவரை எதிர்க்காதீர்கள், அது உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.
  • உங்கள் நண்பருக்காக நீங்கள் முடிவெடுக்காதீர்கள். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுகளை எடுக்க உதவியாக இருங்கள்.
  • உங்கள் பங்கு நண்பருக்கு உதவுவதே தவிர மீட்பதல்ல.
  • தவறான எண்ணம்: பரிசொன்று துஷ்பிரயோகத்தை மறக்கச் செய்யும்.
    உண்மை: துஷ்பிரயோகம் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்தும்.
  • தவறான எண்ணம்: அது பாதிக்கபட்டவரின் தவறு
    உண்மை: வன்முறை என்பது துஷ்பிரயோகம் செய்தவரின் தவறாகும், ஏனெனில் அவருக்கு ஒரு சிறிய விடயத்தைக்கூட வன்முறையற்ற விதத்தில் தீர்த்துக்கொள்ளத் தெரியாததே காரணமாகும்.
  • தவறான எண்ணம்: ஒரு ஆண் ஒரு பெண்ணை தாக்குவது   சரியானதுதான்.
    உண்மை: ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பது பழமையானதும் வெறுக்கத்தக்கதுமான ஒரு விடயமாகும். அது ஒரு வீரமான செயல் அல்ல.
  • தவறான எண்ணம்: ஆண்கள் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.
    உண்மை: உண்மையான காதலை கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த முடியாது. பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், கருணை மற்றும் மதிப்பளித்தல் மூலம் மற்றவரின் விருப்பங்களை மதித்து நடப்பதே சிறந்ததாகும்.
  • தவறான எண்ணம்: நீங்கள் ஒருவரை காதலிப்பீர்களாயின் அவருக்குத் தேவையான அனைத்தையுமே செய்யவேண்டும்.
    உண்மை: அப்படிச் செய்யத்தேவையில்லை. ஒருவர் தனது துணையின் விருப்பு வெறுப்புகள், மற்றும் எல்லைகள், வரம்புகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல் மூலமே உண்மையான அன்பைப் பெற முடியும்.

பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பலவற்றில் பாதிக்கப்பட்டவருக்கு துஷ்பிரயோகம் செய்தவரை ஏற்கனவே தெரிந்திருக்கும். எனினும் சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களால் நீங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படலாம். இவ்வாறான நிலைமைகள் யாருக்கும் ஏற்படலாம், அதன்போது அச்செயலைப் புரிந்தவர் மீதே முழு அளவில் குற்றம் சுமத்தப்படும். இருப்பினும் இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்க்க நீங்கள் எப்பொழுதும் சுற்றுச் சூழல் தொடர்பாக விழிப்பாக இருப்பதுடன், உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்துக்கொள்வதும் அவசியமானதாகும்.

வீட்டிற்கு வெளியில் இருக்கும்போது பாதுகாப்பாக இருங்கள்

  • முடிந்த வரை கூட்டமாக இருங்கள். தனிமையாக இருத்தல் உங்களை வன்முறை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கலாம்.
  • எப்பொழுதும் உங்கள் பெற்றோருக்கு அல்லது நண்பர்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.
  • உங்கள் கைத்தொலைபேசியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், அதன் பெட்றி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாராவது சந்தேகத்துக்கிடமான  ஒருவரை நீங்கள் கண்டால், உடனே யாருக்காவது தொலைபேசி மூலம் சொல்லப்போவதுபோல் பாசாங்கு செய்யுங்கள்.
  • தெரியாதவர்கள் உங்களிடம் வழி அல்லது உதவி கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்தவரை வேகமாக நடந்து செல்லுங்கள்.
  • உங்களை இனந்தெரியாதவர் ஒருவர் நிறுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். அவரிடமிருந்து தூர விலகி நின்று பேசுங்கள்.
  • உங்களை யாராவது பின் தொடர்கின்றார்கள் என்று உணர்வீர்களாயின் விரைவாக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுங்கள்.
  • உங்களுக்கு அருகில் வாகனமொன்று நிறுத்தப்பட்டு உங்களை அழைத்தால், அருகில் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்களை அவர்கள் இழுத்து வாகனத்தினுள் போட்டுக்கொள்ள அது வாய்ப்பாகலாம்.
  • உங்களை இழுக்க முயற்சி செய்வார்களாயின் உங்களால் முடிந்தவரை போராடுங்கள், உதவி கேட்டுக் கத்துங்கள், அவர்களின் கைகளை கடியுங்கள், அவர்களை முடிந்தவரை ஏதாவது வழியில் காயப்படுத்துங்கள், முடிந்தால் ஓடிவிடுங்கள்.
  • நீங்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டுள்ளீர்கள் எனத் தெரிந்தால் கூச்சலிடுங்கள் அல்லது உதவி கேட்டுப் பலமாகக் கத்துங்கள்.
  • உதவி கேட்டுக் கத்துவதற்கு ஒரு போதும் வெட்கப்பட வேண்டாம். நீங்கள் ஒரு தவறையும் செய்யவில்லை, எனவே உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பலமாக கத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

இணையத்தளம் கற்பதற்கும், தொடர்புகொள்வதற்கும் உள்ள ஒரு மகத்தான இடமாகும். அது இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல விடயங்களுக்கும், தீய விடயங்களுக்குமான ஒரு முக்கியமான அங்கமாக மாறி வருகின்றது. எவ்வாறாயினும் நாம் அதனுள் பிரவேசிக்கும் முன்னர் அதிலிருக்கும் ஆபத்துக்கள் பற்றி விழிப்பாக இருக்காவிடில் அது எங்கள் வாழ்க்கையைச் சீரழித்துவிடும். எனவே இணையத்தளத்தில் உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பின்வரும் பாலியல் வன்முறை நடத்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

செக்ஸ்டிங்

இதன் பொருள் SMS வட்ஸ்அப், ஸ்நெப்ஷொட் மற்றும் மின்னஞ்சல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாலியல் செய்திகளை, படங்களை  அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஒருவர் தனது நிர்வாணப் படங்களை தனது காதலிக்கு அல்லது காதலனுக்குத் தாங்களாகவே அனுப்பவும் அல்லது மற்றுமொருவரின் நிர்ப்பந்தம் காரணமாக (பெரும்பாலும் பெண்கள்) தங்களது நிர்வாணப் படத்தை தாங்களாகவே அனுப்பவும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கக் கொள்ள செக்ஸ்டிங் ஒரு ஆரம்பப்படியாக இருக்கலாம். நீங்கள் அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு முகம்கொடுப்பீர்களாயின், அதற்கு சாதகமாக பதிலளிக்காதீர்கள். அத்துடன் ஒரு நிர்வாணப் படத்தை அனுப்பச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சம்மந்தப்பட்டவருக்கு சுட்டிக்காட்டுங்கள். நீங்கள் அமைதியாகவே இருந்தால், நீங்களும் அதை விரும்புவதாக மற்றவர் நினைக்கலாம்.

சமூக ஊடக வன்முறைகள்

ஒருவருக்கு எதிரான தேவையற்ற பாலியல் கருத்துக்கள் அல்லது செயற்பாடுகள் என்பவை பாலியல் வன்முறையாக கருதப்படுகின்றது. அதற்காக இணையத்தளம் மூலம் தகவல்களைப் பரிமாற உதவும் வெப்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூ-டியூப் போன்றவற்றை பயன்படுத்தியிருந்தாலும் - அவை அனைத்துமே சமூக ஊடக வன்முறைகளிலேயே சேர்க்கப்படும். இவற்றில் ஒளிப்பதிவு அல்லது படங்களை விநியோகித்தல் அல்லது பாலியல் நடவடிக்கைகளை உள்ளடக்கிய வீடியோக்களை சமூக ஊடகம் மூலமாக அனுப்புதல், இணையத்தளத்தின் மூலம் குறிப்பாக பெண்களை அச்சுறுத்திப் பாலியல் மற்றும் பணம் பெற முயற்சித்தல் போன்றவை சமூக ஊடக வன்முறைகளில் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை அதிகாரிகளின் கவனத்திற்கு வருவதில்லை.

இணையத்தள பாலியல் வன்முறைகளை எவ்வாறு தவிர்ப்பது

  • உங்கள் யூசர்நேம்ஸ் மற்றும் ஈ - மெயில் முகவரிகளைக் கவனமாக தேர்ந்தெடுங்கள்.
  • தனிப்பட்ட விபரங்களை சுயமாக வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் பார்க்கும்படி உங்கள் தனிப்பட்ட இணையத்தளப் பதிவுகளை வைக்க வேண்டாம்.
  • இணையத்தளத்தில் உங்கள் படங்களைத் தேவையற்ற விதத்தில் பதிவேற்றம்  செய்வதைத் தவிருங்கள். அல்லது பதிவேற்றம் செய்யும் உங்கள் படங்கள் பற்றி விழிப்பாக இருக்கும்.
  • யாராவது உங்களை வெப்கெம் ஊடாக பார்ப்பதிலும், நீங்கள் யாரையாவது வெப்கெம் ஊடாக பார்ப்பதிலும் கவனமாக இருங்கள். வெப்கெம் மூலமாக மற்ற பக்கத்தில் உள்ளவர் உங்கள் படங்களை எடுத்துச் சேமித்து வைத்து, அதை இணையத்தில் வைரலாக வெளியிடும் சாத்தியம் உள்ளது.
  • அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் அநாகரீகமான அரட்டைகளை ஏற்காது தவிர்த்து விடுங்கள்.
  • இணையத்தளம் மூலமாக அறிமுகமான ஒருவர் உங்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றாலோ அல்லது தொலைபேசி மூலமாக பேசவேண்டும் என்றாலோ மிகவும் கவனமாக இருங்கள். அவசரப்படாமல் நன்கு யோசித்து முடிவெடுங்கள். நீங்கள் நம்பும் ஒருவரை சந்திக்கும்போது எப்போதும் பெற்றோர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சென்று சந்தியுங்கள். இணையத்தள நண்பர்களை ஆட்கள் இல்லாத, தனியான இடத்தில் ஒருபோதும் சந்திக்காதீர்கள்.
  • இணையத்தள பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிப் பொலிஸாரிடம் முறையிடவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியும்.
FaLang translation system by Faboba