ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பதென்பது எந்த வயதிலும் முக்கியமானதாகும். வளரிளம் பருவம் அதற்கு விதிவிலக்கல்ல. நன்கு பல் துலக்குதல், முறையான, ஆரோக்கியமான ஆகாரங்களை எடுத்தல், இடைக்கிடை பல் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற பழக்க வழக்கங்கள் உங்களுக்கு ஆரோக்கியமான, கவர்ச்சிகரமான புன்னகையை பெற்றுத்தரும். உங்கள் வாழ்க்கையில் பல முக்கிய தெரிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்கவேண்டிய வயதில் இருக்கும் உங்களுக்கு வாய் சுகாதாரமும், அழகிய புன்னகையும் மிகவும் முக்கியமானவை என்பதை மறவாதீர்கள்.

முறையற்ற உணவுப் பழக்கமானது வளரிளம் வயதினரான உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தைப்போலவே வாய் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அளவுக்கதிகமாக உணவு உண்பதால் ஏற்படும் வாந்தி மற்றும் பசியற்ற தன்மை, அச்சமூட்டக்கூடிய எடை அதிகரிப்பு, அதன் காரணமாக ஏற்படும் உணவு உண்ண முடியாத தன்மை, குறைவாக உண்ணுதல் மற்றும் அதனால் ஏற்படும் வாந்தி போன்றவை உங்கள் வாய் சுகாதாரம் பாதிக்கக் காரணமாக அமையலாம்.

நீங்கள் தேவையான ஊட்டச்சத்துக்களை முறையாகப் பெறாவிடின், உங்கள் வாயிலுள்ள  ஈறு மற்றும் ஏனைய திசுக்களிலிருந்து இரத்தம் கசியும். உமிழ்நீரை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் வீக்கமடைந்து வாய் உலர்வடையும் பிரச்சினைகள் ஏற்படலாம். அடிக்கடி வாந்தி எடுப்பதால் பற்களும் பாதிக்கும். ஏனெனில் வயிற்றில் உள்ள வலுவான அமிலம் மீண்டும் மீண்டும் மேலே வந்து பற்கள்மேல் படுவதால், பற்கள் மீதுள்ள எனாமல் எனும் மேற்பூச்சு படிப்படியாகக் கரைந்து, அதன் நிறம், வடிவம் என்பவற்றில் மாற்றம் ஏற்படும். பல்லின் ஓரங்கள் தேய்வடைந்து இலகுவில் உடைந்துவிடும். சூடான அல்லது குளிரான உணவு மற்றும் பானங்கள் அருந்துவதும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

பல் மருத்துவர்கள் நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு, தவறான உணவு முறையை இனம் கண்டு நோயாளிக்குத் தேவையாயின் மனநல ஆலோசனைகளைப் பெற வழிகாட்டுவதுடன், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் செல்வதற்கு பரிந்துரையையும் செய்வார்கள். பல் மருத்துவர்களால் அமில அரிப்பால் ஏற்படும் பல் சிதைவுகளை சரி செய்யவும், பல்லை நிரப்ப மற்றும் பல்சார்ந்த ஏனைய சிகிச்சைகளையும் செய்வர், ஆனால் அவர்களால் உணவுக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது. எனவே நீங்கள் உணவுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பின் உங்கள் மருத்துவரின் அல்லது பல் மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

உதடு, நாக்கு மற்றும் கன்னத்தில் துளையிட்டு உருண்டைகள் போன்ற சில்வர் ஆபரணங்களை நீங்கள் அணிய விரும்பினால் அவை ஆபத்தான விளைவுகளையும் தரலாம் என்பதை மறவாதீர்கள். உண்ணும்போது, உறங்கும்போது, மெல்லும்போது அல்லது பேசும்போது நீங்கள் வாயில் குத்தியுள்ள ஆபரணம் உங்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும். உங்கள் வாயில் மில்லியன் கணக்கான பக்டீரியாக்கள் உள்ளன, எனவே வாயில் துவாரம் இடுவதால் அவற்றில் தொற்றுக்கள் மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நாக்கில் துளையிடுதல் காலப்போக்கில் பற்சிதைவை ஏற்படுத்துகின்றது. இதனால் பற்களைப் பாதுகாக்க பற்களை நிரப்புதல் அல்லது வேர் கால்வாய் சிகிச்சையளித்தல் போன்ற தேவையான பற்சிகிச்கைகளைப் பெறவேண்டியிருக்கும். வாயில் துளையிடுவதால் ஏற்படும் தொற்றுநோய்கள் காரணமாக, வாயில் ஏற்படும் வீக்கம், இரத்தக் கசிவு, இரத்தக்கசிவை கட்டுப்படுத்த முடியாமை, இரத்தம் விஷமாதல் மற்றும் இரத்தக்கட்டிகள் ஏற்படுதல் மற்றும் மூச்செடுப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். அத்தோடு கல்லீரல் அழற்சி மற்றும் என்டோகார்டைட்டிஸ் (இருதயஅழற்சி) போன்றவற்றுக்கும் வாயில் துளையிடுதல் காரணமாக அமையும்.

நீங்கள் வாயில் துளையிட்டு ஆபரணம் அணிந்திருப்பின் அது பேசுவதற்கு, மெல்லுவதற்கு அல்லது விழுங்குவதற்கு இடைஞ்சலாக இருக்கும். அவை பின்வருவனவற்றுக்கும் காரணமாக இருக்கும்:

  • தொற்றுநோய்கள், வலி மற்றும் வீக்கம்: உங்கள் வாய் ஒரு ஈரமான சூழலுடனானது. அது பெருந்தொகையிலான பக்டீரியாக்களைப் பரப்பும் மற்றும் தொற்று ஏற்படுவதற்கு ஏற்ற இடமாகத் திகழ்கின்றது. அத்தொற்றுக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியன.
  • சேதமாகிய ஈறு, பற்கள் மற்றும் நிரப்புதல்: வாயில் துளையிட்டு நீங்கள் பொருத்தியுள்ள உருண்டை வடிவிலான ஆபரணத்தைக் கடிப்பதும் விளையாடுவதும் ஒரு பொதுவான பழக்கமாகும். இதனால் ஈறுகள் காயமடைவதுடன் கீறல்கள், விரிசல்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். ஆத்தோடு நிரப்பிய பற்களும் இதனால் சேதமடையலாம்.
  • உலோக ஒவ்வாமை: வாயில் துளையிட்ட பகுதிகளில் ஒவ்வாமை எதிர்விளைவுகள் கூட ஏற்படலாம்.
  • நரம்புகள் சேதமடைதல்: உதடு மற்றும் நாக்கில் துளையிடுவதால் நரம்புகள் சேதமடைந்து உங்கள் நாக்கு உணர்ச்சியிழக்கும், பொதுவாக இது தற்காலிகமானதே. என்றாலும், சிலநேரங்களில் இது நிரந்தரமாகவும் ஏற்படக்கூடும். நரம்புகள் காயமடைவதால் சுவை உணர்வு பாதிக்கப்படுவதுடன், வாயை அசைப்பதிலும் சிரமம் ஏற்படும். நரம்புகள் சேதமடைவதால் உங்கள் நாக்கின் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இரத்த இழப்பும் ஏற்படும். 
  • அதிக அளவில் உமிழ்நீர் உற்பத்தி: நாக்கில் துளையிடுவதால் அதிக அளவில் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படும்.
  • பல் பரிசோதனையில் சிரமங்கள்: வாயில் துளையிட்டு ஆபாரணம் அணிவதால் அது பல் சிகிச்சைக்காக எக்ஸ்ரே எடுக்கும்போது இடையூறாக இருக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாயில் துளையிட்டிருப்பின் நீங்கள் பின்வருவனவற்றை மனதில் வைத்துக்கொள்வது நல்லது:

  • பின்வரும் தொற்றுக்களுக்கான ஏதாவது அறிகுறிகள் தென்படின் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அல்லது வைத்தியர் ஒருவரை சந்திக்கவும்:

    வாயில் வீக்கம், வலி, காய்ச்சல், துளையிட்டிருக்கும் பகுதியைச் சுற்றி நடுக்கம் அல்லது சிவப்பு நிறமாதல்.
  • துளை ஏற்பட்டிருக்கும் பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும். நீங்கள் ஒவ்வொருமுறை உண்ட பின்பும், வாயில் அணிந்திருக்கும் ஆபரணத்தில் படிந்திருக்கும் உணவுத்துகள்களை நன்கு கழுவிவிடவும். ஆந்த ஆபரணத்தை  பல்லால் கடிப்பதைத் தவிர்ப்பதுடன், துளைக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிருங்கள். மெல்லும்போதும் பேசும்போதும் ஆபரண நகர்வில் மென்மையைக் கடைப்பிடியுங்கள்.
  • உங்கள் ஆபரணத்தின் இறுக்கத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் (சுத்தமான கைகளால்) பரிசீலியுங்கள். இதன் மூலம் ஆபரணகழன்று வாயில் இறுகுவதையும், விழுங்குவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
  • விளையாடும்போது ஆபரணத்தை கழற்றிவிட்டு உங்கள் வாயை மௌத் கார்ட் ஒன்றினால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் பல் மருத்துவரை இடைக்கிடை சந்தியுங்கள். அத்துடன் ஒவ்வொரு நாளும் இரு தடவைகள் பல் துலக்க மறவாதீர்கள்.

உங்கள் வயதில் எப்போதாவது பரீட்சைகள் வரும்போது, அதைப்பற்றி நித்திரையின்றி சிந்தித்துக்கொண்டிருப்பதும் அல்லது நீங்கள் விரும்பும் பாடசாலையைத் தேர்ந்தெடுப்பதில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்வதும் சாதாரண விடயமாகும். துரதிர்ஷ்டவசமாக அந்த மன அழுத்தம் உங்கள் பற்களுடன் தொடர்புபடும்போது அது பல் நறுமுதல் அல்லது பல் அரைத்தலுக்கு வழி வகுக்கின்றது. பல் அரைத்தலை பல் கடித்தல் என்றும் அழைப்பர். சில நாட்பட்ட பல் அரைத்தலானது பல் முறிவுக்கும் அல்லது தளர்வுக்கும் மற்றும் பல் கழன்று விழுவதற்கும் காரணமாக அமையும். இதன் காரணமாக பற்சிகிச்சைகள் மற்றும் பகுதியளவான பொய்ப்பல் அல்லது முழு அளவிலான பொய்ப் பற்களைக்கூட அணிய வேண்டிய நிலைமை ஏற்படும்.

மேலும் பல் கடித்தலால் டெம்புரொமன்டிபுளர் (tempromandibular) நோய் எனப்படும் வலியுடன் கூடிய, வாயைத் திறப்பதிலும் மூடுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்படும். உங்கள் தாடைகளில் புண் ஏற்பட்டிருத்தல், திறக்கும்போதும் மூடும்போதும் 'கிளிக்' எணும் சத்தம் ஏற்படுதல், வாய் மற்றும் பற்கள் கூசுதல் போன்றவற்றை அவதானிப்பீர்களாயின் உங்களுக்கு இரவில் பல் கடிக்கும் பிரச்சினை இருக்கக்கூடும்.

பல் கடித்தலைத் தவிர்த்தலும் சிகிச்சையளித்தலும்

மன அழுத்தம் காரணமாக நீங்கள் பற்களை கடிப்பீர்களாயின் ஒரு பல் மருத்துவரை சந்தியுங்கள். அவர் உங்களுக்கு இரவில் 'நைட் கார்ட்' அணிந்து பற்களைப் பாதுகாக்கவும், அப்பாதிப்பிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும் உதவி செய்வார். அவர் கவுன்சலிங் மூலம் தகுந்த ஆலோகனைகளைப் பெறுவதற்கும், உடற்பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும், தசைகளை தளர்ச்சியடையச் செய்ய சிகிச்சையாளர் ஒருவரின் சேவையைப் பெறுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவார்.

பல் கடிப்பதால் நித்திரைக் கோளாறு ஏற்படுமாயின் அப்பழக்கத்தை இல்லாமல் செய்ய அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். பல் கடித்தலை நிறுத்தக்கூடிய ஏனைய வழிமுறைகள்:

  • கோலாக்கள், சொக்கலேட், கோப்பி போன்ற கெபேன் கலந்த உணவு மற்றும் பானங்களைத் தவிர்த்தல்.
  • மதுபானம் அல்லது அல்கஹோலைத் தவிருங்கள். இதனால் பற்கள் மேலும் தீவிரமாக பாதிக்கப்படக்கூடும்.
  • பென்சில் அல்லது பேனாக்கள் போன்ற உணவல்லாத பொருட்களை வாயில் போட்டு மெல்லுவதை தவிருங்கள். சுவிங்கம் சாப்பிடுவதை தவிருங்கள், ஏனெனில் அவ்வாறு சுவிங்கம் மெல்லும்போது தாடைத் தசைகள் இறுக்கிப்பிடித்து நன்கு மெல்லுவதற்கு பழக்கப்படுவதுடன் பல் நறுமும் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கின்றது.
  • முடிந்தவரை உங்கள் பற்களை இறுகக் கடிப்பதையோ அல்லது பல் அரைப்பதையோ நிறுத்த நீங்களாகவே முயற்சி செய்யுங்கள்.
  • பகல் பொழுதில் நீங்கள் பற்களை இறுகக் கடிப்பதாக அல்லது அரைப்பதாக உணர்வீர்களாயின், உங்கள் நாக்கை பற்களுக்கிடையில் நிலைப்படுத்துங்கள். இப்பயிற்சியானது உங்கள் தாடைத் தசைகளுக்கு ஓய்வினை வழங்க உதவும்.
  • இரவில் சுடு தண்ணீரில் நனைக்கப்பட்ட துணியைக்கொண்டு உங்கள் தாடைத் தசைகளுக்கு ஒத்தடம் கொடுங்கள்.

வளரிளம் பருவத்தில், அழகாகவும், எடுப்பாகவும் தோற்றமளிப்பது உங்கள் சமூக அந்தஸ்தையும் வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும். ஆரோக்கியமான பற்களும், அழகான புன்னகையும் சமநிலையைப் பேணுவதற்கு வழிவகுக்கும். உங்களுக்கு விளையாட்டு முக்கியமெனில் மவுத் கார்டும் (Mouth Guards) முக்கியமானதே. பற்கள் உடைதல் அல்லது சேதமடைவதிலிருந்து மவுத் கார்ட் உங்களைப் பாதுகாக்கும். விளையாட்டின்போது எதிர்பாராவிதமாக நீங்கள் மற்ற விளையாட்டு வீரர்கள் மேல் அல்லது கடினமான தரையின் மேல் மோதலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மவுத் கார்ட் உங்களைப் பாதுகாக்கும். உங்களுக்கும் மவுத் கார்ட் ஒன்று தேவையாயின் உங்கள் பல் மருத்துவரை சந்தியுங்கள்.

உங்கள் வாய்க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சிறந்த மவுத் கார்ட் பல் மருத்துவரால் தயாரித்துத் தரப்படும். எவ்வாறாயினும், உங்களால் கஸ்டம் - பிட்டட் மௌத் கார்ட் (custom-fitted mouth guard) ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாவிடின், நீங்கள் ஸ்டொக் மொளத் கார்ட் (stock mouth guard) அல்லது பொய்ல்-அன்ட்-பைட் மௌத் கார்ட் (boil-and-bite mouth guard) ஆகியவற்றைப் பாவிக்கலாம். நீங்கள் இணைக்கப்பட்ட அல்லது வேறொரு நிலையான பல் உபகரணமொன்றை உங்கள் தாடையில் பொருத்தியிருப்பீர்ளாயின், வாய் பாதுகாப்பான் (mouth protector) ஒன்றை இப்பற்களுக்கு அணியும்படி உங்கள் பல் மருத்துவர் ஆலோசனை வழங்குவார். அத்துடன் மௌத்காட்கள் பொதுவாக மேல் பற்களையே மூடச் செய்யும், நீங்கள் கீழ் பற்களுக்கும் பல் இறுக்கிகளை அல்லது பிரேஸ்கள் அணிந்திருப்பீர்களாயின் உங்கள் பல் மருத்துவர் கீழ் பற்களுக்கும் மவுத்கார்ட்டை அணியும்படி ஆலோசனை வழங்குவார். உங்களிடம் ரிடேனர் (retainer) அல்லது அகற்றப்படக்கூடிய உபகரணங்கள் இருப்பின், அதை எந்தவொரு விளையாட்டின்போதும் பயன்படுத்த வேண்டாம்.

இதோ உங்கள் மவுத் கார்ட்டை பராமரிக்கும் குறிப்புகள் சில:

  • ஒவ்வொரு முறையும் பாவிப்பதற்கு முன்பும், பின்பும் பற்தூரிகையினால் பற்பசைகொண்டு மவுத் கார்ட்டைத் துலக்குங்கள்.
  • எப்போதாவது மவுத் கார்ட்டை குளிர் நீர், சவர்க்கார நீர் கொண்டு கழுவுங்கள்.
  • மவுத் கார்ட்டை பலமானதும், காற்றோட்டமுள்ளதுமான கொள்கலனில் கொண்டு செல்லுங்கள்.
  • சூரிய வெளிச்சத்தில் அல்லது சுடு நீரில் ஒருபோதும் வைக்காதீர்கள்.
  • பாவிக்கும்போது அது கிழிந்துள்ளதா என்பதை பரிசோதித்து தேவையாயின் மாற்றவும்.

நிறம்மாறிய பற்கள் உங்கள் புன்னகையின் பிரகாசத்தைப் பெருமளவில் பாதிப்பதுடன் வளரிளம் பருவத்தில் உங்களுக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் பெரிதும் இடைஞ்சலாக இருக்கும். பற்கள் நிறம் மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக உணவுப் பழக்க வழக்கங்கள், புகைத்தல், நோய்கள், மருந்துகள், சூழல் மற்றும் மோசமான பற்சுகாதாரம் போன்றவைகள் காரணமாக அமையலாம்.

சில வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் பற்கள் நிறம் மாறுவதைத் தவிர்க்கலாம். உதாரணமாக, நீங்கள் காப்பி அருந்துபவராக அல்லது புகைபிடிப்பவராக இருப்பின் இவைகள் அனைத்தையும் ஒன்றாக விட்டுவிடுங்கள். அத்துடன் உங்கள் பற்சுகாதாரத்தைப் பேணுவதற்கு நன்றாகப் பற்களைத் துலக்குவதுடன், தினமும் மவுத் வொஷ் பயன்படுத்தி வாயை நன்றாகக் கழுவுங்கள். அத்துடன் ஒரு பல் மருத்துவரிடம் சென்று 6 மாதங்களுக்கு ஒருமுறை பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பற்கள் அசாதாரணமான நிறமாகவும், வேறு அறிகுறிகளும் தென்படுமாயின் ஒரு பல் மருத்துவரிடம் சென்று காட்டுங்கள்.

பற்களை வெண்மையாக்குவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் பல்வேறு வகையான கருவிகள் மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. நீங்கள் வெண்மையாக்கும் தயாரிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர் பல் மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவறாகவும், முறைகேடாகவும் வெண்மைப்படுத்தும் தயாரிப்புக்களைப் பயன்படுத்துவது பற்களுக்கு கடும் சேதங்களை உண்டு பண்ணலாம்.

உங்கள் பல் மருத்துவர் உங்கள் வாய் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர் என்பதால் உங்களுக்கு சரியான வெண்மைப்படுத்தும் தெரிவை மேற்கொள்வார். அத்தோடு அவர் பற்கள் வெண்மைப்படுத்தலை மேற்பார்வை செய்து நீங்கள் அடைய விரும்பும்படியான பலனைப் பெற உதவியாக இருப்பார்.

கோணலான, சீரற்ற, நெருக்கமான பற்கள் உங்கள் வயதினரிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். பேசும்போதும், சிரிக்கும்போதும் நீங்கள் அதில் தனிக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கோணலான மற்றும் நெருக்கமான பற்களை சுத்தம் செய்வது கடினமாக இருப்பதுடன் பல் சொத்தையாதல், ஈறு நோய்கள் மற்றும் பற்களை இழக்கக்கூடிய பிரச்சினைகளுக்கும் இது காரணமாக அமையும்.

பல்லமைப்பியல் நிபுணர்களால் இப்படியான பிரச்சினைகளை சாத்தியமான முறையில் சரிசெய்யவும், சரியான வாய் சுகாதாரத்தைப் பேணவும், பற்களின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சீராக இருப்பதை உறுதி செய்யவும் முடியும். பற்களைச் சீராக்க நீங்கள் சிலவேளை பல் இறுக்கி எனப்படும் பிரேஸ் (Brace) ஒரு செட் அணிய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டவசமாக பிரேசஸ்கள் இப்பொழுது பாவனைக்கு மிக இலகுவானதாகவும், பல்வேறு நிறங்களில், பற்களின் பின்புறம் வைக்கக்கூடிய வகையிலும் கிடைக்கின்றது. அத்தோடு பல் மருத்துவர்களால் மேலதிக சிகிச்சைத் தெரிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் கண்ணுக்குத் தெரியாத, அகற்றக்கூடிய எலைனர்ஸ்களும் (aligners) கிடைக்கக்கூடியதாக உள்ளன.

மேலும் தீவிரமான பல் வடிவமைப்புச் சிகிச்சைகளுக்கு நீங்கள் ஒரு விசேட பல்லமைப்பியல் நிபுணரிடம் செல்லவேண்டும்.

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் பாதிக்கப்படும் ஞானப்பற்கள் மிகவும் அசௌகரியமானவைதான். பாதிக்கப்படும் ஞானப்பல்லானது வாயின் பின்புறத்தில் இருந்து மூன்றாவது கடவாய்ப் பல்லாகும். அது வெளிப்பட அல்லது சாதாரணமாக வளர்ச்சியடைய தேவையான இடம் இருப்பதில்லை.

வயது வந்தவர்களின் வாய்க்குள் உருவாகும் கடைசிப் பல்லாகும். சாதாரணமாக ஞானப்பற்கள் 17 - 19 வயதுகளில் வெளியில் வருகின்றன. பெரும்பாலானவர்களுக்கு வாயின் பின்புறத்தில் நான்கு ஞானப்பற்கள் இருக்கின்றன. இரண்டு பற்கள் மேல் வளைவிலும் மற்றும் இரண்டு கீழ் வளைவிலும் உள்ளன.

பாதிக்கப்படும் ஞானப்பற்களின் விளைவாக வலி, ஏனைய பற்கள் சேதமாகுதல் மற்றும் ஏனைய பல் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்படும் ஞானப்பற்கள் எந்தவிதமான உடனடி அல்லது வெளிப்படையான பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அவற்றை சுத்தப்படுத்துவது மிக கடினம், அவை மற்ற பற்களை விட பற்சிதைவு, ஈறு நோய் போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் உட்படுகின்றது. பாதிக்கப்பட்ட ஞானப்பற்கள் தொற்றுக்குள்ளாதல், சேதமாகுதல் மற்றும் ஏனைய பற்களை சேதமாக்குதல் போன்ற பல் பிரச்சினைகளையும் உண்டாக்கும். உங்களுக்கும் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படலாம். அவை பின்வருமாறு:

  • சிவந்த அல்லது வீங்கிய ஈறு
  • முதிராத அல்லது இரத்தம் கசியும் ஈறு
  • தாடை வலி
  • தாடையைச் சுற்றி வீக்கம்
  • வாய் துர்நாற்றம்
  • வாயில் விரும்பத்தகாத சுவை
  • வாயைத் திறப்பதில் சிரமம்

உங்கள் கடைவாய் பல்லின் பின்பகுதியில் பாதிக்கப்பட்ட ஞானப்பல்லுடன் தொடர்புடைய ஏதாவது அறிகுறிகள் இருப்பின் ஒரு பல் மருத்துவரிடம் காட்டவும். பாதிக்கப்படும் ஞானப்பல்லில் வலி அல்லது வேறு ஏதாவது தீர்க்கமுடியாத பல் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அப் பல் அகற்றப்படும்.

வாய் துர்நாற்றம் - ஹாலிடோசிஸ்

ஹாலிடோசிஸ் என்பது வாய் துர்நாற்றத்தைக் குறிக்கும்.

நாம் அனைவரும் வாய்த் துர்நாற்றமுள்ள மனிதர்களைச் சந்தித்திருக்கின்றோம். அவர்கள் வாயைத் திறந்தால் எதிரே இருக்கும் அனைவரும் மாயமாய் மறைந்து விடுவார்கள். அத்தகைய ஒரு நிலை வளரிளம் பருவத்தினராகிய உங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வாய் சுகாதாரக் குறைபாடே காரணமாகும்.

நீங்கள் பற்களைத் தினமும் துலக்காது அல்லது சுத்தப்படுத்தாது விடுவீர்களாயின், நீங்கள் உண்ணும் உணவின் துண்டுகள் வாயில் தங்கிவிடும். இதனால் பற்களுக்கிடையில், ஈறுகளில் மற்றும் நாக்கின்மேல் பக்டீரியாக்கள் வளர்ச்சியடைந்துவிடும். இதுவே துர்நாற்றம் ஏற்படக் காரணமாகும். இந்த பிரச்சினையை நாம் பற்களை நன்கு துலக்குவதாலும் சுத்தப்படுத்துவதாலும் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

எவ்வாறாயினும் உங்கள் பற்களின் மேற்பரப்பில் அதிக அளவில் அழுக்குகள் படிந்திருப்பின் அதை வெறுமனே பல் துலக்குவதால் அகற்றிவிட முடியாது. அதை அளவீடு செய்ய நீங்கள் ஒரு பல் மருத்துவரை சந்திக்கவேண்டும். அத்துடன் உங்கள் பல் மருத்துவரின் ஆலோசனையின்படி ஒரு பக்டீரியா எதிர்ப்பு வாய் கழுவும் மருந்தை (மவுத் வொஷ்) சிறிது காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

புகைத்தலால் விட்டுச் செல்லப்படும் இரசாயனங்கள் வாயில் தங்கியிருந்து, அதுவும் கெட்ட வாடை ஏற்படக் காரணமாக அமையலாம். சில அரிய சந்தர்ப்பங்களில் நுரையீரல் நோய்கள், வாயுப் பிரச்சினைகள் போன்ற நோய்களின் காரணமாகவும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.

உங்கள் பற்களைப் பாதுகாக்க, பல் துலக்குதல் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது காலையிலும், நித்திரைக்குப் போவதற்கு முன்னரும் பல் துலக்கவேண்டும். புளோரைட் கலந்த பற்பசையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையிலான பகுதிகளை சுத்தம் செய்ய பஞ்சை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு பல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.

சரியாக பராமரிக்காவிடில் பற்சிதைவானது வலிமிகுந்ததும், அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும். பற்களில் ஏற்படும் துவாரங்கள் பற்சிதைவு என அழைக்கப்படுகின்றது. அது உங்கள் பல்லின் மேற்பரப்பை நிரந்தரமாக சேதமாக்கக்கூடியது. அது சிறிய ஓட்டைகளாகவும் வெடிப்புகளாகவும் வளர்ச்சியடைகிறது. உங்கள் வாயில் துவாரங்கள் ஏற்படுவதற்குக் கூட்டுக் காரணிகளாக பக்டீரியா மற்றும் அடிக்கடி சர்க்கரை நிறைந்த அல்லது கோலா பானங்கள் அருந்துவது மற்றும் ஒட்டுமொத்தமான தவறான பல் சுகாதார பராமரிப்பும் போன்றவைகள் காரணமாக அமைகின்றன.

பற்சிதைவு மற்றும் பற்துவாரம் ஏற்படுதல் என்பது உலகின் பொதுவான ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விளங்குகின்றது. விசேடமாக சிறுபிள்ளைகள், வளரிளம் பிள்ளைகள் மற்றும் வயதானவர்களுக்கிடையில் இது பரவலாகக் காணப்படுகின்றது. அதேவேளை பற்சிதைவானது குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஏற்படக்கூடியது.

பற்சிதைவின் அறிகுறிகள் இடம் மற்றும் அளவைப் பொறுத்து வேறுபடுகின்றன. ஒரு பற்துவாரம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. ஆனால் துவாரம் வளர்ச்சியடையும்போது, பின்வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவையாவன:

  • பல் வலி
  • பல் கூசுதல்
  • இனிப்பாக, சூடாக, குளிராக எதையாவது உண்ணும்போதும், அருந்தும்போதும் லேசான வலி ஏற்படுதல்.
  • பற்களில் தெரியுமளவுக்கு குழிகள் அல்லது ஓட்டைகள்
  • பற்களின் மேற்பரப்பில் பழுப்பு, கருப்பு அல்லது வெள்ளை நிறமான  கறைகள் தோன்றுதல்.
  • கடிக்கும்போது வலி ஏற்படுதல்.

சிதைந்த மற்றும் உடைந்த பற்களை பல்வேறு வழிகளில் நிரப்ப முடியும். ஆனால் அது பற்திசு பாதிப்புக்கு மட்டுமே சாத்தியமாகும், அதற்கு அப்பால் செல்ல முடியாது. அது ஒரு சிறிய பழுது பார்த்தல் மாத்திரமே. பல் சொத்தை அல்லது உள் பகுதி உடைந்திருப்பின் அதை நிரப்ப முடியாது. நரம்பு நிரப்புதல் செய்ய வேண்டும்.  இதை வேர் கால்வாய் சிகிச்சை என அழைக்கப்படும். இங்கு நரம்பு கூழ் அகற்றப்படுவதுடன் பல்லின் உட்பகுதி சுத்தம் செய்யப்பட்டு விசேட பொருளொன்றினால் அடைக்கப்படும்.

வேர் கால்வாய் சிகிச்சையின் பின்னர் பல்லின் வாய் குறுக்குப்பகுதி என அழைக்கப்படும். அதை ஒரு சிறிய மீட்டெடுத்தல் அல்லது பற்சிகரம் (பல்லின் மேற்பகுதிபோன்று தோற்றமளிக்கும் ஒரு செயற்கைப் பொருள்) ஒன்றை வைத்தல் மூலம் குறிப்பிட்ட பல்லை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்கு மிகவும் செலவாகும்.

பற்சிகரத்தைப் பல்லின்மேல் பொறுத்துவதால் பல்லின் வடிவம் மற்றும் அளவு, பலம் மற்றும் அதன் தோற்றத்தை மீளப்பெற முடியும். பற்சிகரத்தைச் சரியான இடத்தில் ஒட்டி உறுதிப்படுத்தியபின் ஈறு வரிசையின் மேலே உள்ள பல்லின் முழுமையாக தெரியக்கூடிய பகுதி அடைக்கப்பட்டு விடும்.

இழக்கப்பட்ட பல்லுக்குப் பதிலாக வேறு பல்லை மாற்றுவது முக்கியமான அம்சமாகும். இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. பெரும்பாலும் பொய்ப்பல் ஒன்றை பொறுத்துவது அதற்கு செலவு குறைந்த எளிய வழிமுறையாகும்

பல் பாலங்கள் - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்களைப் பொறுத்துவதற்கு பல் பாலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலம் பொறுத்துவது நிரந்தர பல் சீரமைத்தலாவதுடன் (நிலையான செயற்கைப் பற்கள்) அது இழக்கப்பட்ட பல்லொன்றுக்கு (அல்லது ஒன்றுக்கும் அதிகமான பற்கள்) பதிலாக செயற்கை பற்களை ஏற்கனவே இருக்கும் பற்களுடன் இணைத்து நிரந்தரமாக பொறுத்தும் ஒரு முறையாகும்.

பல் மாற்று சிகிச்சை: இது பல் மாற்று சிகிச்சையின் மற்றுமொரு தெரிவாகும். இப் பல் உள்வைப்பானது தாடை எலும்பு அல்லது மண்டை ஓட்டின் துணையுடன் பொய்ப்பற்களை பொருத்தும் ஒரு இடைமுக அறுவைச் சிகிச்சையின் அங்கமாகும். இதுவும் பற்சிகரம், பாலம் போன்ற பொய்ப்பல் பொறுத்தும் சிகிச்சைகளுக்கு ஒப்பானதே. இது பற்களைத் தாடை எலும்பின் உதவியுடன் பொருத்தும் ஒரு சத்திர சிகிச்சையாகும். இச் சிகிச்சையின்படி பற்களைத் தாடை எழும்பில் துளையிட்டுப் பொருத்துவதால் அது இழக்கப்பட்ட ஒரு பல்லின் வேராக செயற்படுவதுடன், பல்லை அல்லது பற்களை நன்து தாங்கிப் பிடித்துக்கொள்கிறது. இது இயற்கைப் பல்லுக்கு ஒப்பானது ஏனெனில் அது பக்கத்தில் உள்ள பற்களுக்கு பாதிப்பு இல்லாமல் தானாக நிற்கிறது. பல் உள்வைப்பு மற்றும் தாடை எலும்புக்கும் இடையிலான இணைவுச் செயற்பாடு ஒஸியோஇன்டர்கிரேசன் (osseointegration) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பல் உள்வைப்புக்கள் டைட்டானியத்தால் தயாரிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றை ஒரு வெளிப்பொருளாக இனங்காணாது எலும்புடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பல் உள்வைப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. பல் உள்வைப்பதில் உள்ள வெற்றியோ, தோல்வியோ அது பொருத்தப்படும் நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பல் சீரமைப்பு சிகிச்சைகளான நரம்பு நிரப்புதல் போன்ற சிகிச்சைகள் போதனா வைத்தியசாலைகளில் உள்ள விசேட பற்சிகிச்சைப் பிரிவுகளிலும், கொழும்பு, மஹரகம, பேராதெனிய ஆகிய இடங்களில் அமைந்துள்ள விசேட பல் வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும் பல் உள்வைப்பு சிகிச்சைகள் தற்போது அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை.

FaLang translation system by Faboba