வளரிளம் பருவமானது தோல் பிரச்சினைகள் மிக்க பருவமாகும். தோல் அல்லது சருமப் பிரச்சினைகளால் தாங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக இள வயதினர் பலர் நினைக்கின்றனர், ஆனால் உண்மை அதுவல்ல. தோல் பிரச்சினை என்பது வளரிளம் பருவத்தினர் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நீங்கள் இப் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இப் பிரச்சினையால் உங்கள் வாழ்க்கைமுறை பாதிக்கப்படவோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்படவோ கூடாது என்பதை நீங்கள் எந்நேரமும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு முகப்பரு இருப்பின், அது உங்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு பிரச்சினையல்ல. கிட்டத்தட்ட 80% மான இளவயதினரிடையே ஏதோ ஒரு வகையில் முகப்பரு ஏற்படுகின்றது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதாகவும் உங்களுக்கு முகப்பரு உண்டாகின்றது. அது வேதனை தரக்கூடியதாகவும் இருக்கலாம். முகப்பரு வெள்ளைப் புள்ளிகளாகவும், கருப்புப் புள்ளிகளாகவும், சீழ் நிரம்பிய வடிவத்திலும் இருப்பதோடு அது உங்களுக்கு சங்கடம் தரும் விடயமாகவும் இருக்கலாம். இருப்பினும் உங்கள் சருமத்தை மேம்படுத்த உங்களால் முடிந்தவற்றை நீங்கள் செய்யுங்கள்.

முகப்பரு ஏற்படுவதற்கான காரணம்

பூப்படையும்போது ஏற்படும் ஹோமோன் மாற்றத்தினாலேயே பெரும்பாலும் முகப்பரு ஏற்படுகின்றது. சிலநேரங்களில் முகப்பரு அதிக சரும மெழுகை உற்பத்தி செய்கிறது. அது இறந்த செல்களுடன் சேர்ந்து சருமத் துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இந்த அடைபட்ட சருமத் துவாரங்களில், உங்கள் தோலில் வாழும் தீங்கிழைக்காத பக்டீரியாக்கள் தொற்றை ஏற்படுத்துகின்றது. இதனால் சீழ் நிரம்பிய பருக்கள் தோன்றுவதுடன் சுற்றிவர உள்ள தோலிலும் அவை பரவுகின்றன.

முகப்பருவைத் தடுத்தலும் அதற்கான சிகிச்சையும்

முகப்பருவுக்கு எந்தவிதமான உடனடித் தீர்வுகளும் இல்லை. அதை தடுக்க நீண்டகால பராமரிப்பு தேவை. பின்வரும் சுய கவன வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முகப்பருக்களினால் ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கலாம்.

  • உங்கள் சருமத்தில் எண்ணெய் மற்றும் அழுக்கு படிவதைக் குறைப்பதற்கு ஒரு மிருதுவான சவர்க்காரம் இட்டு, இளஞ்சூடான நீரில் கழுவுங்கள். நீராவி உட்பட அதிக வெப்பம் அல்லது அதிக குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தினால் முகப்பருக்கள் மேலும் மோசமாகிவிடும்.
  • முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்தை கடுமையாக தேய்த்துக் கழுவ வேண்டாம்.
  • கடினமான, உராய்வை ஏற்படுத்தக்கூடிய சவர்க்காரங்கள், தூய்மையாக்கிகளைப் பாவிக்க வேண்டாம். முகம் துடைக்கும்போது ஒரு மென்மையான துவாயைப்  பயன்படுத்துங்கள்.
  • அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தேய்த்துக் கழுவுவதை தவிருங்கள்.
  • எண்ணெய்த் தன்மையுள்ள கிறீம்கள் மற்றும் முகப்பூச்சுக்களைப் பாவிக்காதீர்கள். எண்ணெய் தன்மையற்ற (non-comedogenic) தயாரிப்புகளை உங்கள் முகத்துக்கு பயன்படுத்துங்கள்.
  • பருக்களைக் கிள்ளி எடுக்க முயலாதீர்கள். அவ்வாறு செய்தால் பருக்களில் உள்ள பக்டீரியாக்கள் தோலின் உள்ளே ஆழமாக நுழைய வாய்பாகிவிடும். மேலும் பருக்களைக் கிள்ளுவதால் எரிச்சலுடன் கூடிய வீக்கம் ஏற்படுவதுடன் நிரந்தர தழும்புகளையும் உருவாக்கிவிடும்.
  • பருக்களின்மேல் பற்பசையைப் பூசுவதுபோன்ற விடயங்களைச் செய்யாதீர்கள்.

மேற்குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றியும் முகப்பருக்களைக் குணமாக்க முடியாவிடின் வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.

எண்ணெய்த் தன்மையான சருமம் கவர்ச்சிகரமானதாக இல்லாவிடினும், இள வயதினர் மத்தியில் எண்ணெய்த் தன்மையான சருமம் என்பது ஒரு பொதுவான விடயமாகும். உங்கள் சருமம் பொதுவாக பளபளப்பாகவும், தடிப்பாகவும், மங்கிய நிறத்திலும் இருக்கின்றபோது காலப்போக்கில் எண்ணெய்த்தன்மையான சருமம் தோன்றுகின்றது. எண்ணெய்த் தன்மையான தோலில் கரடு முரடான துளைகள், பருக்கள் மற்றும் மருக்கள் தோன்ற வாய்ப்புகள் அதிகம். அது கரும்புள்ளிகளையும் உண்டாக்கலாம். இவ்வகையான சருமத்தில் எண்ணெய் உற்பத்திசெய்யும் சரும மெழுகுச் சுரப்பிகள் தேவைக்கும் அதிகமாக எண்ணெயை சுரக்கின்றன. இந்த எண்ணெய் சருமத்திற்கு வழுவழுப்புத்தன்மையுள்ள பிரகாசத்தைக் கொடுக்கிறது. இதனால் சருமத்துளைகள் பெரிதாகி சருமத்திற்கு கரடு முரடான தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தில் அடிக்கடி முகப்பருக்கள் தோன்றுகின்றன. அதேவேளை எண்ணெய்த்தன்மையான சருமம் இருந்தும் முகப்பருக்கள் இல்லாத இளவயதினரும் நம்மிடையே இருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கான காரணங்கள்

எண்ணெய்த்தன்மையுள்ள சருமம் ஓரளவு மரபணுவுடன் தொடர்புபட்டதாக இருக்கும். சிலருக்கு மற்றவர்களைவிட செயல்திறன் மிக்க, சரும மெழுகுச் சுரப்பிகள் இருக்கலாம். அதேவேளை மரபணு மாற்றங்களும் அவர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.

எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்திற்கான சிகிச்சையும், அதைத் தவிர்த்தலும்

உங்களுக்கு எண்ணெய்த்தன்மையள்ள சருமம் இருப்பின் அதை அளவுக்கு அதிகமாக தேய்த்துக் கழுவவோ அல்லது கடுமையான, சிராய்ப்பு சுத்தப்படுத்திகளை பயன்படுத்தவோ வேண்டாம். ஏனெனில் அது பெரும்பாலும் உங்கள் தோலிற்கு வலியுடன் கூடிய வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிலைமையை மோசமாக்கிவிடும். எண்ணெய்த்தன்மையுள்ள சருமத்தை எண்ணெயற்ற ஒப்பனைப் பொருட்கள், மென்மையான சுத்தப்படுத்திகள், மற்றும் மென்மையான மொய்ஸ்ச்சரைசர் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

உடலில் துர்நாற்றம் வீசுவதை யாரும் விரும்பமாட்டார்கள். குறிப்பாக நீங்கள் ஒரு இளவயதினராக இருப்பின் அது உங்களுக்கு மிகவும் சங்கடம் தரும் ஒரு விடயமாக இருக்கும். எமது உடலில் வாழும் பக்டீரியாக்கள் வியர்வையை அசிட்டாக மாற்றுவதாலேயே துர்நாற்றம் வீசுகின்றது. இளவயதினர் மத்தியில் பொதுவாக இப்பிரச்சினை காணப்படுகின்றது. எனவே நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணலாம்.

உடலில் மணம் வீசுவதற்கான காரணங்கள்

உடலில் மணம் வீசுவதற்கு உங்கள் உடலில் வளரும் பக்டீரியாக்களே காரணமாகும். குறிப்பாகக் கால் இடுக்குகள் மற்றும் அக்குள் பகுதிகளில் விசேடமான வியர்வைச் சுரப்பிகள் காணப்படுகின்றன. உண்மையில் பக்டீரியாக்கள் புரதச்சத்தை சில அமிலங்களாக மாற்றுவதன் விளைவாகவே வியர்வை துர்நாற்றம் வீசுகின்றது.

உடல் மணத்திற்கான சிகிச்சையும், அதைத் தடுத்தலும்

நீங்கள் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிவதன் மூலம் உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அக்குளில் வியர்வையைத் தவிர்க்க டியோட்ரன் பூசுவதால் அது வியர்வையை மேலும் அசிட் தன்மை வாய்ந்ததாக்குகின்றது, இதன் மூலம் பக்டீரியாக்கள் உயிரோடு வாழ முடியாத சூழ்நிலை அங்கு உருவாகின்றது. அது தோலுக்கும் வியர்வைச் சுரப்பிகளுக்கும் இடையில் அடைப்பை ஏற்படுத்தி, வியர்வையை சுரக்கவிடாது தடுக்கின்றது. இருப்பினும் டியோட்ரன் பூசுவதால் புற்றுநோய் ஏற்படாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எப்பொழுதும் உலர்ந்த சருமம் உங்களுக்கு இருப்பின் உங்கள் பெயரை தோலில் கீற முடியும். உலர்ந்த சருமத்தில் போதுமான ஈரப்பதன் இல்லாத காரணத்தினால் தோல் செதில்களாக உரிந்து அல்லது வெடித்துவிடுகிறது.

உலர்ந்த சருமத்திற்கான காரணங்கள்

சருமம் உலர்வடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில:

  • குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள்
  • அளவுக்கதிகமாக ஒப்பனை செய்தல்
  • பாதிப்பு மிக்க சவர்க்காரங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள்
  • உடல் வறட்சி
  • அளவுக்கதிகமான சூரிய ஒளி
  • சில மருந்துகள் மற்றும் இரசாயனங்கள்
  • வறண்ட சூழ்நிலைகள்
  • அளவுக்கு அதிகமாகக் கழுவுதல்

உலர்ந்த சருமத்தை தவிர்த்தலும் சிகிச்சைகளும்

உலர்ந்த அல்லது வறண்ட சருமத்திற்கு வாசனையற்ற மொய்ச்சரைசர் கிறீமைப் பாவியுங்கள், பலர் இதன் மூலம் விரைவாக பயன் பெற்றுள்ளனர். அதிகமான நீர் அருந்துதல் (ஒரு நாளைக்கு 2 லீற்றர்) மற்றும் அளவுக்கு அதிகமான சூரிய ஒளியை தவிர்த்தல் போன்றவை உங்கள் சருமத்தின் ஈரலிப்புத் தன்மையை பேண உதவியாக இருக்கும்.

நீங்கள் வளரிளம் பருவத்தினராக இருக்கும்போது தலையில் வழுக்கை விழுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பலருக்கு நாளொன்றுக்கு 50 முதல் 100 வரையான தலைமுடிகள் உதிர்கின்றன. உதிரும் இந்த முடிகள் அதே நுண்ணறையில் மீண்டும் வளர்கின்றன. சாதாரணமாக இந்தத் தொகையிலான முடி உதிர்தலுக்காக கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு அதற்கும் அதிகமான அளவில் முடி உதிருமாயின், ஏதோ பிரச்சினை உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்

வளரிளம் காலத்தில் உங்களுக்கு தலைமுடி உதிருமாயின், நோய் ஏதும் உங்களுக்கு இருக்கலாம் அல்லது நீங்கள் சரியாக உண்ணாமை, சில மருந்துகள் அல்லது மருத்துவ சிகிச்சைகள் (கீமோதெரபி) போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாக அமைகின்றன. சிலருக்கு அவர்களின் சிகையலங்காரங்களினால் (ஜடை) போன்றவைகளால் தலைமுடி அதிக நேரம் இழுபட்டுக்கொண்டிருப்பதால் முடி உதிரக் காரணமாகின்றது. இருப்பினும் வளரிளம் பருவத்தில் தலைமுடி உதிர்வது ஒரு தற்காலிகமான விடயமாகும்.

தலைமுடி உதிர்வதைத் தவிர்த்தலும், அதற்கான சிகிச்சையும்

தற்காலிகமாக தலைமுடி உதிருமாயின், அதற்கான காரணத்தை சரி செய்யும்போது மீண்டும் அது வளர்ந்துவிடும். உங்களுக்கு தலை மயிர் உதிர்ந்து அதற்கான காரணம் தெரியாவிடின் உங்கள் வைத்தியருடன் பேசுங்கள். உங்களுக்கு ஏன் மயிர் உதிர்கிறது என்பதை கண்டுபிடித்து, சாத்தியமானால் அவ்வடிப்படை பிரச்சினையை தீர்க்கும் சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்குவார்.

இப்பிரச்சினை வளரிளம் பருவத்தில் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லாவிட்டாலும், பெண்களுக்கு இது பெரும் பிரச்சினையாகவே இருக்கும். பெண்களுக்கு உடலில் வளரும் முடியின் அளவு உடல் நிலைக்கேற்ப மாறுபடுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு உதட்டுக்கு மேல், தாடையில், மார்பில் மற்றும் வயிற்றில் அல்லது பின்புறம் வளரும் முடிகள் மிகவும் மென்மையாகவும், நிறம் மங்கியதாகவும் இருக்கும். நீங்கள் ஒரு இளம் பெண்ணாக உங்களுக்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் கருமையான முடி இருக்குமாயின் அந்நிலைமையை ஹர்சுடிஸ்ம் (hirsutism) என அழைக்கப்படும்.

உடலில் வளரும் அதிகப்படியான முடிக்கான சிகிச்சை

உடலில் வளரும் அதிகப்படியான முடிகளை நீக்க அல்லது மறைக்க இதோ சில வழிகள்:

  • சவரம் செய்தல் - எளிதானது, விரைவானது. சவரம் செய்வதால் முடி மீண்டும் விரைவாகவும் கருமையாகவும் வளராது. ஆனால் அது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும்.
  • பிளீச்சிங்(வெளிற்றுதல்) - இது முடியின் கருமையைக் குறைத்து சிறிது காலத்திற்கு பார்க்க அழகாக வைத்திருக்கும், ஆனால் இது உங்கள் தோலுக்கு எரிச்சலை உண்டாக்குவதுடன் அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாக அது இருக்காது.
  • வெக்ஸிங், பிளக்கிங் அல்லது திரெடிங் (அகற்றுதல்) - இது வலிமிகுந்ததுடன் தழும்புகளை உண்டாக்கும் அல்லது மயிர்ப்புடைப்பு மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.
  • மின்னாற்பகுப்பு (Electrolysis) என்பது மயிர் செல்களை அழிக்கவும், நிரந்தரமாக முடிகளை நீக்குவதற்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் ஒரு முறையாகும். எவ்வாறாயினும், இதற்கு பல்வேறு சிகிச்சைகளை நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளவேண்டி இருக்கும் அத்துடன் இது வலி மிகுந்ததாகவும், தழும்புகளை உண்டாக்குவதாகவும், சிலவேளைகளில் தோலின் நிறம் மாறுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
  • லேசர் மூலம் முடிகளை அகற்றல் - சக்தி மிக்க ஒளிக்கதிரைப் பயன்படுத்தி முடிகளை அழித்தல். இச் சிகிச்சை நிறைவடைவதற்குப் பல மாதங்கள் எடுப்பதுடன் வெளிறிய சருமம் மற்றும் முடிகளைக் கொண்ட பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பச்சைக் குத்துதல் உங்கள் நண்பர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டுவதுடன் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் உதவும். பச்சை குத்தினால் அது வாழ்நாள் முழுவதும் இருக்கும். எனவே நீங்கள் அதனை மேற்கொள்வதற்கு முன்னர் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் எதிர்காலத் தேவைக்கேற்ப அதிலிருந்து வெளியே வருவதற்கு இடமில்லை. அத்துடன் நீங்கள் பச்சைக் குத்துவதைப்பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை நீங்கள் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும்.

  • நோய்த்தொற்று - பச்சைகுத்தும் ஊசிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன் படுத்துவதால் ஹெபடைட்டிஸ், எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நோய்த்தொற்றை தவிர்ப்பதற்கு பச்சைகுத்தும் ஊசிகளை நன்கு சுத்தமாக பயன்படுத்துவது சிறந்தது.
  • குத்திய பச்சையை அகற்றுவதில் உள்ள பிரச்சினைகள்
  • ஒவ்வாமை எதிர்விளைவுகள்
  • கிரனுலோமாஸ் இது வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் பொருட்களை சுற்றி வடிவமைக்கப்படும் முடிச்சுக்களாகும். உடலானது பச்சைகுத்துவதற்குப் பயன்படுத்தும் நிறத்தை (tattoo pigment) வெளியில் இருந்து வரும் பிற பொருளாகவே பார்க்கிறது.
  • கிலோய்ட் போர்மேசன் கிலோய்ட் என்பது சாதாரண எல்லைகளையும் தாண்டி பரவும் தழும்புகளாகும்.

வளரிளம் பருவத்தினர் மத்தியில் அழகுசாதனப் பொருட்களின் (கொஸ்மெடிக்) பயன்பாடு மிகவும் பிரபலமானதாகும். நீங்கள் எவ்வாறான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாகும், அது உங்கள் சருமத்தை பாதிப்பதாக இருக்கக்கூடாது. எப்போதும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது உங்கள் சருமத்தின் வகையை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையிலான அழகுசாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்தில் உள்ள கிரீஸ், பக்டீரியா மற்றும் ஒப்பனையை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதாகும். கரும்புள்ளிகளை அகற்ற அல்கொஹோல் கலக்காத லோஷன் மற்றும் துவாய் துணியைப் பயன்படுத்தி (ஒவ்வொரு நாளும் காலையில்) சுத்தப்படுத்துங்கள். அதேபோல் மொஸ்ச்சரைசர் கிறீமை நீங்கள் பாவிப்பது எளிதானதுடன்,  எண்ணெய் கலக்காத மொஸ்ச்சரைசர் பாதுகாப்பானது. ஸ்க்ரப் செய்யும்போது மென்மையாகச் செய்யுங்கள். மிக முக்கியமாக வெளியில் செல்லும்போது சன்ஸ்க்கிரீன் கிறீமைப் பாவியுங்கள்.

உலர்ந்த மற்றும் எண்ணெய்த் தன்மையான சருமத்தைத் தவிர ஏனைய வகையிலான சருமங்களும் உள்ளன. அவற்றில் உங்களுடைய எது?

உணர்வுமிக்க சருமம் (Sensitive Skin) - உணர்வுமிக்க சரும வகை எண்ணெய்த்தன்மை வாய்ந்ததாகவும், உலர்வுத்தன்மை வாய்ந்ததாகவும் இரு வகையிலும் அமையலாம். அது பொதுவாக சருமத்தின் வகையை விட தோலின் நிலைமையை வைத்தே அறியப்படுகிறது. உணர்வு மிக்க சருமம் சுற்றாடல் நிலைமைகளுக்கும் அல்கொஹோல், வாசனை எண்ணெய்கள் மற்றும் செயற்கை நிறங்கள் அடங்கிய ஒப்பனைப் பொருட்களுக்கும் அதன் ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

சாதாரண சருமம் (Normal Skin) - சாதாரண சருமம் சரியான அளவில் சீபம் என்று அழைக்கப்படுகின்ற எண்ணெய்ப்பசை போன்ற ஒரு பொருளை வெளியிடுகின்றது, அதில் எண்ணெய் தன்மையும், உலர் தன்மையும் சமமான அளவில் காணப்படும். சாதாரண சருமம் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் காணப்படுகின்றது. இருப்பினும் இச்சரும வகையையும் ஏனைய சருமவகையைப் போலவே நன்கு பராமரிக்க வேண்டும்.

இணைச் சருமம் (Combination Skin) - இணைச் சருமம் பல்வேறு வகையிலான சரும வகைகள் மற்றும் பொதுவான சரும வகை ஆகிய இரண்டுமாகும். பலருக்கு இரண்டு வெவ்வேறு சரும வகைகள் உள்ளன. இணைச் சருமம் பொதுவாக ஒரு எண்ணெய்த்தன்மை வாய்ந்த "T-Zone" தோலாக வகைப்படுத்தப்படுகிறது. அது நெற்றி, மூக்கு மற்றும் தாடை ஆகியவற்றை உள்ளடக்கியது. அதேவேளை தாடை, கண் பகுதி, மற்றும் வாய் போன்றவற்றை சுற்றியுள்ள தோல் சாதாரணமானதும், உலர்ந்ததுமாகவும் எப்பொழுதும் மிருதுவாகவும் எளிமையாகவும் இருக்கும். அதை மென்மையாகவும், எளிமையாகவும் வைத்திருப்பதற்கான சரும பராமரிப்பை முறையாக மேற்கொண்டால் அது அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் சிறப்பாக இருக்கும்.

FaLang translation system by Faboba