நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் பரவாயில்லை, வீதிப் பாதுகாப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமானதாகும். நீங்கள் வீதியில் நடந்து செல்லலாம், வீதியைக் கடக்கலாம் அல்லது ஒரு வாகனத்தைச் செலுத்தலாம். மேற்குறிப்பிட்ட எதைச் செய்தாலும் நீங்கள் வீதிப்பாதுகாப்பை அறிந்துகொள்வதும், போக்குவரத்துச் சட்டங்களை மதித்து நடப்பதும் முக்கியமாகும். இது உங்கள் சுய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது மற்றவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானதாகும். ஒவ்வொரு நாளும் இலங்கை உட்பட உலகம் முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் போக்குவரத்து விபத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களால் நிறைந்து வழிகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் சிறுவர்களும், வளரிளம் பருவத்தினருமாகும். அது பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தரும் விடயமாக அமைகின்றது.

பிள்ளைகள் பெரியவர்களைப்போல் அல்ல. அவர்களுக்கு வாகனங்களின் நகர்வுகள், பாதையை உபயோகிப்பது என்பன பற்றிய அறிவு குழப்பகரமானது. அதற்கு அவர்கள் மனம், உடல் மற்றும் சமூக ரீதியாக வளர்ச்சியடையாததே காரணமாகும். எனவே பிள்ளைகள் மத்தியில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட அவர்களின் மனக்கிளர்ச்சி, ஆபத்தை உணராமை, மற்றும் கடும் பதட்டமான போக்குவரத்து சூழ்நிலைகளை கையாளும் திறமை இல்லாமை போன்றவைகள் காரணமாக அமைகின்றன.

பிள்ளைகளுக்கு இருக்கும் பின்வரும் வறையறைகளே வீதி விபத்துக்களில் அவர்களுக்குப்  பலத்த காயங்கள்  ஏற்படக் காரணமாக அமைகிறது.

வளர்ச்சி போதாமை

குழந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் வளரும் நிலையிலேயே உள்ளன. அனைத்து பாகங்களும் ஒப்பீட்டளவில் பெரியவர்களைவிட மிருதுவானவை. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட உடல் ரீதியாக ஏற்படும் காயங்கள் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியன.

உயரம் போதாமை

பிள்ளைகள் உயரம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு சுற்றியுள்ள போக்குவரத்தை சரியாக கவனிப்பது சிரமமாக இருக்கும். அதே போல் பிள்ளைகளை வாகன சாரதிகளுக்கு  மற்றும் பாதசாரிகளுக்கு சரியாகத் தெரியாமல் போகலாம்.

பார்வை போதாமை

குழந்தைகள் புலன் உணர்வுத் தன்மை குறைந்தவர்கள். எனவே அவர்களுக்கும் பிற பொருட்களுக்கும் இடையிலான தூரத்தை, குறிப்பாக அசையும் பொருட்களுக்கிடையிலான  தூரத்தை மதிப்பிடுவது சிரமமாக இருக்கும்.

கேட்கும் திறன் போதாமை

சிறு பிள்ளைகளுக்கு அவர்களை நெருங்கும் வாகனங்களின் அளவு, வேகம் மற்றும் இயந்திர ஒலி என்பவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படலாம். எந்தப் பகுதியில் இருந்து சத்தம் வருகிறது, எந்தப் பகுதியிலிருந்து ஒரு கார் வருகிறது என்பதை அடையாளங் காண்பதும் சிரமமாக இருக்கலாம். 3 - 4  வயது பிள்ளைகளின் கேட்கும் திறன்  பெரியவர்களைவிட 7 - 12 டெசிபிள்ஸ் குறைவாக இருக்கும். 6 வயதில் கூட வாகனங்களின் ஒலி வரும் திசையை அறிந்துகொள்வதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவர்.

பிள்ளைகள் பொதுவாக நண்பர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அல்லது ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தியிருக்கும்போது வீதிப்போக்குவரத்து ஒலிகளை காதில் வாங்கிக்கொள்வதில்லை.

அவதானம் போதாமை

வீதியை பயன்படுத்துவது ஒரு சிக்கலான செயற்பாடாகும். எனவே வீதிகளைப் பயன்படுத்துவோர் எப்பொழுதும் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் பிள்ளைகளைப் பொருத்தவரையில் ஒரே நேரத்தில் பல விடயங்களில் கவனம் செலுத்துவது சிரமமான காரியமாகும். வீதிகளில் செல்லும்போது குழந்தைகள் ஏனைய தூண்டுதல்களினால் திசை திருப்பப்பட்டு திடீரென வீதிக்குள் ஓடிவிடக் காரணமாக அமையலாம். ஒரு குழந்தை தன்னை நோக்கி வரும் கார் ஒன்றின் வேகத்தைவிட, நிறத்தின் மீதுள்ள ஆசையால் காரின் நிறத்தின் மீதே முழுக்கவனத்தையும் செலுத்துவர். அவர்கள் எளிதாக தூண்டப்படுவதனால் இரண்டு விடயங்ளில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கும். உதாரணமாக: பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது பந்து வீதியில் விழுந்துவிட்டால் உடனடியாக அவர்கள் பந்தை எடுக்க ஓடுவார்களே தவிர, வீதியில் வரும் வாகனங்களைப் பற்றிக் கவனிக்க மாட்டார்கள்.

புலன் உணர்வு மற்றும் தீர்மானமெடுக்கும் திறன் போதாமை

பிள்ளைகளுக்கு வெவ்வேறு புலன் உணர்வுகளான வேகம், சத்தம், நேரம் மற்றும் தூரம் போன்றவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் திறன் குறைவாக இருக்கும். அந்த புலன் உணர்வுகள் வீதியை கடப்பதற்கும், வாகன நெரிசல் மிக்க நாற்சந்திகளைக் கடப்பதற்கும் மிக அத்தியாவசியமானவை. 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பொதுவாக நிற்கும் காரொன்றிற்கும் ஓடும் காரொன்றிற்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்வதில் சிரமப்படுவர். அவர்கள் வலப்பக்கத்திற்கும் இடப்பக்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்வதில்லை. வீதியைக் கடக்கும்போது தேவைக்கேற்ப மெதுவாக நடக்கவோ அல்லது நிற்கவோஅவர்களுக்குத் தெரிவதில்லை.

6 வயதிற்குக் குறைவான பிள்ளைகளுக்கு அபூர்வமாகவே மற்றொரு நபரின் நடவடிக்கையை பார்த்து அதற்கேற்றவாறு நடந்துகொள்ள முடியும். எனவே ஒரு பிள்ளை காரொன் றைப்பார்த்தால், அதன் சாரதியும் தங்களை நன்றாகப் பார்த்ததாகவே நினைத்துக் கொள்வார்கள். பாதையை கடப்பதற்கு எது பாதுகாப்பான இடம், எது ஆபத்தான இடம் என்பதை அறியும் திறன் பிள்ளைகளுக்கு இல்லை. பொதுவாக கார் ஒன்று அருகில் வருகிறது என்பதைக்கூட அவர்களால் அனுமானிக்க முடிவதில்லை.

குழந்தைகள் ஒரு விடயத்தில் இருந்து மற்றய விடயத்திற்கு கவனத்தைத் திருப்புவதை சரியாகச் செய்வதில்லை. 20 - 25 வயதாகும் வரை கணித்தல், முடிவெடுத்தல், பகுத்தறிவு, உத்வேகக் கட்டுப்பாடு போன்றவற்றில் மூளையின் பகுதிகள் முழு வளர்ச்சியடைந்திருப்பதில்லை.

உங்களுக்குத் தெரியுமா வீதி விபத்துக் காயங்கள்...

  • உலக அளவில் இளம் வயதினரில் ஏற்படும் மரணங்களுக்கு இவைதான் முதன்மைக் காரணியாக இருக்கின்றன.
  • அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளின் ஆரோக்கிய பாதிப்பிற்கு  இவைதான் முன்னணியில்  இருக்கின்றன.
  • வருடாந்தம் வீதி விபத்துக்களால் 186,300 பிள்ளைகள் உயிரிழக்கின்றனர்.
  • உலக அளவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை என்ற வீதம் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றது.
  • மேற்குறிப்பிட்ட மரணங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட, அபிவிருத்தியடையாத நாடுகளில் மூன்று மடங்கு அதிகமாகவுள்ளது.
  • உலகெங்கிலும் ஆண்டுதோறும் 15 - 44 வயதுக்கிடைப்பட்டவர்களில் 59 வீதமானவர்கள்  வீதி  விபத்துக்களால்  கொல்லப்படுகிறார்கள்.
  • வீதி விபத்துக்களால், 20 வயதிற்குட்பட்டவர்களில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதம் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள்.

உண்மை #1: சிறுமியர்களைவிட சிறுவர்களே வீதி விபத்து தொடர்பான காயங்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். உலக வீதிப் போக்குவரத்து இறப்பு புள்ளி விபரங்களின்படி 25 வயதுக்குட்பட்டவர்களில் (ஆண்டுக்கு) வயதுப்பிரிவு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது வீதிப் போக்குவரத்துக்களில் இளம் பெண்களைவிட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக காட்டுகின்றது. எனவே நீங்கள் ஒரு இளம் ஆணாக இருப்பின் வீதியில் கவனமாக நடந்துகொள்ளுங்கள்.  

உண்மை #2: உங்களுக்குத் தெரியுமா உடல் செயற்திறன் இன்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை, அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தல் அல்லது கணனி விளையாட்டில் செலவழித்தல் ஆகியவற்றினால் பிள்ளைகளின் மன ஒருமுகப்படுத்தல் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. எனவே வயதுகூடிய சில பிள்ளைளுக்கும் போக்குவரத்துப் பாதுகாப்பு பற்றிய  புலணுணர்வு  மேம்படாமல்  இருக்கின்றது.

உண்மை #3: பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தமது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்றார்கள். (பாடசாலைக்கு, விளையாட்டு பயிற்சிக்கு அழைத்துச் செல்லல் போன்றவை). அவர்கள் தமது பிள்ளைகளுக்கு வீதிகளை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது, எவ்வாறு வாகனநெரிசல் மிக்க சூழ்நிலைக்கு முகம் கொடுப்பது என்பது பற்றி அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்கூட வழங்குவதில்லை. எனவே, 20 வயதிலும் அத்தகைய பிள்ளைகளில் பலர் எவ்வாறு வீதியை பயன்படுத்துவது என்பது பற்றிய தெளிவில்லாமல் இருக்கின்றனர்.

இளைஞர்கள் வாகனம் ஓட்டும்போதும் அல்லது பாதசாரிகளாகவும், தங்கள் நடவடிக்கைகளின் விளைவுகள் பற்றிக் கருத்திற்கொள்ளாது ஆபத்தை எதிர்நோக்குகின்றார்கள். ஒரு இளைஞர் என்ற அடிப்படையில் அது இயல்பாக இருந்தாலும் ஆபத்து மிக்கதாக அமைகின்றது. இத்தகைய நடத்தை பெண்களைவிட ஆண்களுக்கு மிக பொதுவானதாக இருக்கின்றது.

ஆபத்து மிகுந்த செயல்களான வாகனங்களுக்கு இடையில் ஓடுவது, ஒடும் வாகனங்களை கண்மூடித்தனமான முந்திச்செல்ல முயல்வது போன்றவற்றிற்கு உங்கள் நண்பனின் தூண்டுதல் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு இளைஞர் என்ற வகையில் உங்கள் வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் மிக முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். அத்துடன் அவர்கள் உங்கள் நடத்தைகளுக்கு உங்கள் பெற்றோரை விட அதிக செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படவைக்க துணிச்சல் மிக்க செயல்களை நீங்கள் செய்ய நினைக்கலாம். ஆனால் அவை உயிராபத்து மிக்கவை. நீங்கள் அவ்வாறு செய்வது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அபாயகரமான காயங்களும், மரணங்களும் ஏற்படக் காரணமாக அமையலாம்.

நீங்கள் செய்யப்போகும் செயல்கள் பேரழிவை உண்டுபண்ணக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டால் உங்களால் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிவதுடன் ஒரு உயிரையும் காப்பாற்ற முடியும். அது சமூகத்தில் நீங்கள் ஒரு பொறுப்புமிக்க நல்ல பிரஜையான மாறுவதற்கான முதற்படியாக அமையும்.

FaLang translation system by Faboba